மாட்டிறைச்சி உண்ண பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கும் பாஜகவின் முயற்சியை முறியடிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் “எனது உணவு- எனது உரிமை” என்ற தலைப்பில் மாட்டுக்கறி திருவிழா நுங்கம்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு, பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரான 12 நூல்களை வெளியிட்டு பேசியதாவது:
மராட்டிய மாநிலத்தில் மாட்டிறைச்சியை தடை செய்யும் சட்டம் 18 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த சட்டத்துக்கு புத்துயிரூட்டி அமல்படுத்தப்பட்டுள்ளது. அச்சட்டத்தின் கீழ் மாட்டிறைச்சி வைத்திருந்தாலே 5 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இதையெல்லாம் தீர்க்க முயற்சிக்காமல், புரதச்சத்து மிகுந்த விலை மலிவாக கிடைக்கும் மாட்டு இறைச்சியை உண்ண தடை விதிக்கின்றனர்.
மாட்டு இறைச்சிக்கு தடை என்ற ஆயுதத்தை கையிலெடுத்து மத மோதலை உருவாக்க பாஜக முயற்சித்து வருகிறது. இடதுசாரி இயக்கங்கள், மதச்சார்பற்ற இயக்கங்களுடன் இணைந்து பாஜகவின் முயற்சியை முறியடிப்போம்.
மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கும் நோக்கத்தோடு தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் முயற்சியை முறியடிக்கும் விதமாகத்தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாநில துணைத் தலைவர் கலி.பூங்குன்றனார், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க வட சென்னை மாவட்ட செயலர் அ.விஜயகுமார், தென் சென்னை மாவட்ட செயலர் எம்.தாமு, இந்திய மாணவர் பெருமன்ற தென் சென்னை மாவட்ட செயலர் டி.ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில், பங்கேற்ற அனைவருக்கும் மாட்டிறைச்சி உணவு வழங்கப்பட்டது.