அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வெள்ளிக்கிழமை அரசு நகரப் பேருந்தின் மீது காங்கிரீட் கலவை லாரி மோதிய விபத்தில் 7 பெண்கள், சிறுமி உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர் பேருந்து நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மதியம் 3.30 மணிக்கு புறப்பட்ட செந்துறை செல்லும் அரசு நகரப் பேருந்து, 8 கிமீ தொலைவில் இருக்கும் ஓட்டக்கோயில் நிறுத்தத்தைக் கடந்த சில நிமிடங்களில் கோர விபத்தைச் சந்தித்தது.
எதிர்திசையில் தளவாயில் இருந்து அரியலூரை நோக்கி வந்த காங்கிரீட் கலவை சுமக்கும் லாரி வேகமாக மோதியதில், பேருந்தின் ஒரு பகுதி முற்றிலுமாகச் சிதைந்தது. 7 பேர் சம்பவ இடத்திலும், 4 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும் இறந்தனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. லேசான காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மது அருந்தியதால் விபரீதம்
விபத்து ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநர் சிதம்பரத்தைச் சேர்ந்த தற்போது ஜெயங்கொண்டத்தில் வசித்துவரும் ராஜேந்திரன் (32), மது அருந்தி இருந்ததாகவும், தாறுமாறான வேகத்தில் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. லாரியின் வேகத்தைப் பார்த்து அரசுப் பேருந்தின் ஓட்டுநர் வல்லாரங்குறிச்சியைச் சேர்ந்த சேட்டு(39), வேகத்தைக் குறைத்தபடி ஒதுங்க முயற்சித்தும், விபத்து நேரிட்டுவிட்டதாக பேருந்தில் பயணித்தவர்கள் கூறினர்.
ராயம்புரம் உள்ளிட்ட சில கிராமங்களில் வெள்ளிக்கிழமை வழிபாட்டு விஷேசங்கள் நடக்க இருந்ததை ஒட்டி பேருந்தில் 75-க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
பலியானோர் விவரம்
இந்த விபத்தில் பொய்யாத நல்லூர் பிச்சைப்பிள்ளை மனைவி அலமேலு(45), உடையார்பாளையம் ராஜக் கண்ணு மனைவி ஆனந்தி(30), நாகல்குழி பிச்சைப்பிள்ளை மகன் சுரேஷ்(25), அரியலூர் காமராஜ் நகர் சம்பத் மகள் பிரபா தர்ஷினி (6), சிதலவாடி தனவேல் (65), ஆதிகுடிக்காடு சிங்காரம் மகன் செல்லமுத்து(55), நாகல்குழி தவமணி மகள் ஜெயந்தி(25), வீராக்கன் செங்குட்டுவன் மனைவி கவிதா(24), ஆர்.எஸ் மாத்தூர் தங்கவேலு மகள் ஜெயலட்சுமி(23), நல்லாம்பாளையம் இளவரசன் மனைவி சாந்தி (24) உள்பட 11 பேர் இறந்தனர்.
கோவை விபத்தில் 4 பேர் பலி
கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி. காலனியைச் சேர்ந்தவர் கருணாகரன். இவர் பெட்ரோல் பங்குகளுக்குத் தேவையான ராட்சத டாங்குகளைத் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவரது மகன் பிரதீப் (21). கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு பயின்று வந்தார். கார் பந்தயத்தில் ஆர்வம் மிகுந்தவர்.
இந்நிலையில், இவர் தனது வீட்டில் இருந்து காரில் கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள கார் பந்தய மைதானத்துக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றார்.
பி.கே.புதூர் பகுதியைச் சேர்ந்த கார் மெக்கானிக் சுவாமிநாதன் (40), கல்லூரி நண்பர்கள் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த ஜனத்குமார் (22), பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் (21), தீபக் (21) ஆகியோர் உடன் சென்றனர்.
போத்தனூர்-செட்டிப்பாளையம் இடையே அரசுப் பணியாளர் நகர் பகுதியில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வெள்ளைச்சாமி என்பவருக்குச் சொந்தமான வீட்டின் சுவர் மீது மோதி நொறுங்கியது.
இந்த விபத்தில் தீபக்கை தவிர மற்ற 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த தீபக் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், காரை பிரதீப் அதிவேகமாக ஓட்டி வந்ததும், வேகமாக வந்ததால் வளைவில் திருப்ப முடியாமல் கட்டுப்பாட்டை இழந்து சுவர் மீது மோதியதும் தெரியவந்தது. பிரதீப்பின் நண்பர்கள் கார் பந்தயப் பயிற்சியைப் பார்க்க வந்தவர்கள் என்பதும், சுவாமிநாதன் கார் மெக்கானிக் பணிகளுக்காக உடன் வந்தார் என்பதும் தெரியவந்தது.