தமிழகம்

பள்ளிபாளையம் அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு நடக்கயிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

செய்திப்பிரிவு

பள்ளிபாளையம் அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு நடக்கயிருந்த திருமணத்தை நாமக்கல் மாவட்ட சைல்டு லைன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையத்தைச் சேர்ந்தவரின் 13 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கும் அதே பகுதியைச் சேரந்த ஆறுமுகம், தமிழரசி ஆகியோரின் மகன் பொன்வேல் (20) என்பவருக்கும் இடையே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அத்திருமணம் நேற்று காலை அங்குள்ள கோயிலில் நடக்கயிருந்தது. அதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட சைல்டு லைன் அமைப்பு மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதையடுத்து அங்கு விரைந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவி மற்றும் மணமகன் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மணப்பெண், மணமகன் ஆகிய இருவரும் திருமண வயதையடையவில்லை. உரிய வயது வராமல் திருமணம் செய்தால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதிகாரிகள் எச்சரித்தனர்.

அதையடுத்து திருமணத்தை நிறுத்திக் கொள்வதாக இரு வீட்டு பெற்றோரும் உறுதியளித்து எழுதிக் கொடுத்தனர். எனினும், சிறுமியை மாவட்ட குழந்தைகள் நல மையத்தில் நாளை ஆஜர்படுத்தும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT