சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற என்னை எங்கு சந்தித்தாலும் தாராளமாக நிதி அளிக்குமாறு திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக நிதி அளிக்குமாறு நான் விடுத்த வேண்டுகோளை ஏற்று இதுவரை ரூ. 2.24 கோடி வசூலாகியுள்ளது. ஒரு மாதத்தில் இவ்வளவு நிதியா என ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறோம். 1966-ல் நான் திமுக பொருளாளராக இருந்தபோது தேர்தல் நிதியாக ரூ. 11 லட்சம் வசூலித்து அண்ணாவிடம் அளித்தோம். அதற்கே நாம் பெரு மகிழ்ச்சி அடைந்தோம்.
1966-ல் வசூலிக்கப்பட்ட ரூ. 11 லட்சம் எங்கே? இப்போது ஒரே மாதத்தில் சேர்ந்துள்ள ரூ. 2.24 கோடி எங்கே? ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை நான் புரிந்து கொண்டாலும் ஒரு மாதத்தில் இவ்வளவு தொகை வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
வெறும் கையில் முழம் போடுவது என கிராமங்களில் பழமொழி சொல்வார்கள். இந்தத் தேர்தலில் நாம் வெறும் கையில் முழம் போட முனைந்திருக்கிறோம். வரும் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதை முடிவு செய்வதற்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அதற்கு திமுகவினர் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கட்சி அலுவலகம், வீடு என என்னை எங்கு சந்தித்தாலும் தாராளமாக நிதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.