நாட்றம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்றம்பள்ளி தாலுகா, அகராவரம் ஊராட்சியில் கடந்த 6 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சித் தலைவர் அன்பழகி, வார்டு உறுப்பினர் தேவன் ஆகியோரிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால் பொறுமையிழந்த பொதுமக்கள் அகராவரம் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று காலை காலிக் குடங்களை நடுரோட்டில் அடுக்கி வைத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து நாட்றம்பள்ளி நோக்கி வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், நாட்றம்பள்ளி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஊராட்சி நிர்வாக மெத்தனப் போக்கு குறித்து பொதுமக்கள் சரமாரியாக குற்றஞ்சாட்டினர்.
ஊராட்சி நிர்வாகத்துடன் பேசி, அடுத்த சில மணி நேரங்களில் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக போலீஸார் உறுதியளித்தனர். இதையேற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.