தமிழகம்

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றம் முற்றுகை: 300 தமிழக விவசாயிகள் டெல்லி புறப்பட்டனர் - உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கே.செல்லமுத்து பேட்டி

எம்.மணிகண்டன்

நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்தை கண்டித்து இந்திய விவசாய சங்கங்கள் சார்பில் டெல்லி யில் நாளை (18-ம் தேதி) நாடாளு மன்ற முற்றுகைப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்க உழவர் உழைப்பாளர் கட்சி, தமிழக விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று மாலை சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டனர்.

இதுதொடர்பாக உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கே.செல்லமுத்து ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தொழில் வளர்ச்சிக்கு நிலம் கையகப்படுத்துதல் அவசியம்தான். அதேநேரம், சர்வாதிகார முறையில் விவசாய நிலத்தை பறிக்கக்கூடாது. பிரதமர் மோடிக்கு அந்நியச் செலாவணி, வெளிநாட்டு முதலாளிகள் மீது இருக்கும் அக்கறை உள்நாட்டு விவசாயிகள் மீது இல்லை.

2013-ல் விவசாயிகளின் கோரிக் கைகளை ஏற்ற ஐ.மு.கூட்டணி, அதன்படிதான் நிலம் கையகப்படுத் தும் சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் மோடி அரசு அப்படி செய்யவில்லை. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தின் படி, இது நிலத்தை பறிக்கும் சட்டமாகத்தான் உள்ளது. இதை எதிர்த்து வழக்கு தொடுக்கவோ, உரிய இழப்பீட்டை பெறவோ முடியாது. ஐ.மு.கூட்டணி அரசு கொண்டுவந்த சட்டத்திலும் சில குறைகள் இருந்தன. அதை எதிர்த்து டெல்லியில் விவசாய சங்கங்கள் மாபெரும் போராட்டம் நடத்தின. இதையடுத்து சரத் பவார், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட 7 அமைச்சர்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அனுப்பி யது. ‘நில இழப்பீடாக சந்தை விலையைவிட 10 மடங்கு அதிக விலை தரவேண்டும். நிலம் கையகப்படுத்த 80 சதவீத விவசாயி களின் ஒப்புதலை பெறவேண்டும். மறுவாழ்வு, மறு குடியமர்வுக்கு வழிவகை செய்யவேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்களிடம் வைத்தோம். சந்தை விலையைவிட 4 மடங்கு அதிக விலை தர ஒப்புக்கொண்ட அரசு, மற்றக் கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டது. தற்போது, விவசாயிகள் நலனுக்காக சட்டத் திருத்தத்தை ஆதரித்ததாக அதிமுக கூறியுள்ளது. நில உரிமையாளரின் மறுவாழ்வு, மறு குடியமர்வுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதா? விதிகளை மீறி நடந்தால் வழக்கு போட முடியுமா? இதில் என்ன நலன்கள் உள்ளன என்பதை அதிமுக விளக்க வேண்டும்.

டெல்லியில் நடக்கவுள்ள நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து சுமார் 300 விவசாயிகள் பங்கேற்கவுள்ளோம். மக்களவை போல மாநிலங்களவையில் இந்த அவசர சட்டத்தை நிறைவேற்ற முடியாது. ஆனால் கூட்டுக்குழு மூலம் நிறைவேற்ற முடியும். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் விவசாயம் பாழாகி, உணவுப் பஞ்சம் ஏற்பட்டு, இந்தியாவே எத்தியோப்பியா போல மாறிவிடும். எனவே, இந்த சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறவேண்டும்.

இவ்வாறு செல்லமுத்து கூறினார்.

SCROLL FOR NEXT