தமிழகம்

இலங்கை மனித உரிமை மீறல் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?- மாநிலங்களவையில் கனிமொழி கேள்வி

ஆர்.ஷபிமுன்னா

இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மீறல்கள் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தள்ளிப்போவதன் மூலம் குற்றவாளிகள் தப்பித்துவிடக் கூடாது என்று மாநிலங்களவையில் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி இன்று மாநிலங்களவையில் கனிமொழி எம்.பி. பேசியதாவது: ''ஐ.நா. மனித உரிமைப் பேரவை இலங்கை அரசு மீதான தனது போர்க்குற்ற விசாரணை அறிக்கையை மார்ச் 2015 கூட்டத் தொடரில் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென இப்போது மனித உரிமைப் பேரவை தனது இந்த அறிக்கையை செப்டம்பர் மாத கூட்டத் தொடரில் வெளியிடுவதாக முடிவு செய்திருக்கிறது.

இந்த ஒத்திவைப்பு இலங்கையில் பதவியேற்றுள்ள புதிய அரசுக்கு மனித உரிமைகள் விவகாரத்தில் ஐ.நா.வுடன் ஒத்துழைப்பு அளிப்பதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதப்பட்டாலும், பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இலங்கையில் மனித உரிமைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் பற்றி கடந்த வருடம் செப்டம்பர் மாதத்திலேயே ஐ.நா. மனித உரிமை பேரவை ஆணையர் மிகுந்த கவலையைத் தெரிவித்தார்.

இதற்கு முந்தைய ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அறிக்கைகளும் போர்க் குற்றங்களுக்காகவும், மனித உரிமை மீறல்களுக்காகவும் இலங்கை அரசை கடுமையாக சாடியிருக்கின்றன. சுதந்திரமான நம்பகமான விசாரணைக்கு அழைப்பு விடுத்தன. ஆனால், இலங்கை அரசு இவற்றில் இருந்து எப்போதும் நழுவியே சென்றது. இப்போது இலங்கையில் ஆட்சி மாற்றம் நடந்தபிறகு இலங்கை மீதான ஐ.நா. மற்றும் அமெரிக்காவின் அணுகுமுறை மென்மை அடைந்திருப்பது போல தெரிகிறது.

ஐ.நா.வின் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பது தாமதமாவதன் மூலம், கொடூர நெஞ்சம் கொண்ட அந்த குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கான ஆவணங்கள் இன்னும் உறுதியோடு தயாரிக்கப்படுகின்றன என்றால் மட்டுமே அந்த தாமதத்தை நியாயப்படுத்தலாம்.

இந்திய அரசு இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இந்த அறிக்கை வெளிடுவது தாமதப்படுவதன் மூலம் மனித உரிமைக்கு எதிரான குற்றம் புரிந்தவர்கள் தப்பிவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

கடந்த 2009, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மனித உரிமை மீறல் குறித்த தீர்மானங்களில் இலங்கைக்கு எதிராகவே இந்தியா வாக்களித்துள்ளது. இந்நிலையில் இப்போது இந்த விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும், இதில் எவ்வித நீர்த்துப் போகும் தன்மையும் இருக்கக் கூடாது. ஐ.நா.வில் உள்ள இந்திய குழுவினர் இலங்கையின் குற்றங்களுக்கு எதிராகவும், அங்கே மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதி கிடைத்திடவும் தங்கள் பிடிமானத்தை உறுதிப்படுத்திடவேண்டும்" என்று கனிமொழி பேசினார்.

SCROLL FOR NEXT