தமிழகம்

பிளஸ் டூ பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது: 8.86 லட்சம் பேர் எழுதுகின்றனர்

செய்திப்பிரிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் டூ பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. 8.86 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். காப்பி அடிப்பதை தடுக்க 5 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ் டூ அரசு பொதுத் தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடக்கும் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்தது. அதன்படி, பிளஸ் டூ பொதுத் தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,382 மையங்களில் தேர்வு நடக்கிறது. 3 லட்சத்து 90 ஆயிரத்து 753 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 311 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 பேர் தேர்வு எழுதுகின்றனர். தனித் தேர்வர்கள் 42 ஆயிரத்து 963 பேர்.

5 ஆயிரம் பறக்கும் படை

மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் 5 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்கள் ஆகியோர் தலைமையிலான 250 தனி பறக்கும் படைகளும் இதில் அடங்கும்.

சென்னை மாவட்டத்தில் 24,653 மாணவர்கள், 28,747 மாணவிகள் என மொத்தம் 53,400 பேர் தேர்வு எழுதுகின்றனர். சென்னை அடுத்த புழல் சிறை மையத்தில் 77 கைதிகள் தேர்வு எழுதுவது குறிப்பிடத்தக்கது. பிளஸ் டூ தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT