தமிழகம் முழுவதும் 8-ம் கட்ட கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம் மூவரசம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பங்கேற்று முகாமைத் தொடக்கிவைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் புனித தோமையார்மலை ஒன்றியத்துக்கு உட்பட்ட மூவரசம்பட்டு கிராமத்தில் கால்நடை பாரமரிப்புத் துறை சார்பில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா கலந்துகொண்டு முகாமைத் தொடங்கிவைத்து, நோய் தடுப்பு முறை குறித்த விளக்க கையேட்டினை விவசாயிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதா வது: தமிழகத்தை கோமாரி நோய் இல்லாத மாநிலமாக்கும் வகை யில் கடந்த 2011 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை தொடர்ந்து கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் தொடங்கும் இந்த முகாம் 20 நாட்கள் நடத்தப்படும். 8-ம் கட்ட தடுப்பூசி முகாம் இன்று (1-ம் தேதி) மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 97 லட்சம் கால்நடை களுக்கும், காஞ்சிபுரம் மாவட்டத் தில் 4 லட்சத்து 43 ஆயிரம் கால் நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. தமிழக அரசின் நடவடிக்கையால் கடந்த ஆண்டில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் ஏற்படவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு, கோவை ஆகிய மாவட் டங்களில் கோமாரி நோயால் கால்நடைகள் இறந்தன.
இதை எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. பின்னர் நடத்தப்பட்ட ஆய்வில், அந்த கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடாதது தெரியவந்துள்ளது. அதனால் இந்த தடுப்பூசி திட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு, அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குநர் வி.பன்னீர் செல்வம், ஆலந்தூர் எம்.எல்.ஏ. வி.என்.பி.வெங்கட்ராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.