மத்திய அரசு ஒதுக்கிய ரூ.5,110 கோடி நிதியை செலவு செய்யாமல் திருப்பி அனுப்பியது யார் என்று பேரவையில் திமுக உறுப்பினர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் திமுக சட்டப்பேரவை கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசியதாவது:
இந்த நிதிநிலை அறிக்கையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் அரசு நிர்வாகமே உருக்குலைந்து போயிருந்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள். திமுக ஆட்சி உருக்குலைந்த ஆட்சியா? அல்லது அதிமுக ஆட்சி உருக்குலைத்த ஆட்சியா? என்பதை தீர்மானிப்பது யார்?
ஓர் அரசு, ஆட்சியில் என்ன செய்துள்ளது என்பதை மத்திய தணிக்கை அறிக்கை சொல்லும். அந்த வகையிலே, மத்திய அரசு ஒதுக்கிய ரூ.5,110 கோடியை செலவு செய்யாமல் தமிழக அரசு திரும்ப அனுப்பியுள்ளது என்று 2012 மத்திய தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (குறுக்கிட்டு): வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்போது செலவு செய்வதில் தாமதம் ஏற்படலாம். பின்னர் அடுத்த ஆண்டு அந்த நிதி செலவு செய்யப்படலாம். இது பொதுவான நடைமுறைதான். திமுக ஆட்சியில் இதுபோன்று நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்படவில்லையா?
துரைமுருகன்: எங்கள் ஆட்சிதான் உருக்குலைந்த ஆட்சி என்கிறீர்கள். உங்கள் ஆட்சி, உருக்குலையாத ஆட்சி என்று சொல்கிறீர்களே, அதனால் கேட்கிறேன். மேலும், பழங்குடியினர் மேம்பாட்டுக்கான நிதி வேறு இலாகாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாகவும் தணிக்கை அறிக்கை கூறுகிறது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கும், சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கும் ஒதுக்கப்படும் மத்திய நிதியுடன் தனது நிதியையும் சேர்த்து செலவிடும் அரசுதான் இந்த அரசு. உதாரணத்துக்கு முதியோர் ஓய்வூதியமாக மத்திய அரசு அளிக்கும் ரூ.200 உடன் தமிழக அரசு ரூ.800 சேர்த்து பயனாளிகளுக்கு ரூ.1,000 முதியோர் ஓய்வூதியம் வழங்குகிறது. இதேபோலத்தான் இந்திரா நினைவு வீட்டு வசதி திட்டமும். மத்திய அரசு நிதியை ஒருபோதும் நாங்கள் விரயமாக்குவதில்லை. செலவு செய்யப்படாத நிதி மறு ஆண்டு செலவிடப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.