தமிழகம்

மகளிர் தினத்தில் வெகுண்டெழுந்த பெண்கள்: டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப்போட்டு போராட்டம் - பெயர் பலகைகளை அடித்து உடைத்தனர்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் அருகே டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுபோட்டு, மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தும் போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள செல்லம்பட்டி, பொய்யுண்டார்கோட்டை, தெக்கூர் ஆகிய கிராமங்களில் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் மது குடிப்பவர்களால் பெண்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை மதுவுக்கு அடிமையாகி குடும்பமே சீரழிவதாகவும், இதனால் பெண்கள், குழந்தைகள் வீடுகளில் நிம்மதியாக வாழ முடியாத நிலை ஏற்படுவதாகவும் கூறி, இந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என இந்த கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுவுக்கு அடிமையான பள்ளி, கல்லூரி மாணவர்கள் 2 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து இறந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, உலக மகளிர் தினமான நேற்று இந்த கிராமங் களைச் சேர்ந்த நூற்றுக்கணக் கான பெண்கள் ஒன்று திரண்டு, ஒவ்வொரு ஊராகச் சென்று அங்கிருந்த டாஸ்மாக் கடை களின் போர்டுகளை அடித்து, உடைத்ததோடு, ஷட்டர் கதவுகளை மூடி, மாலை அணிவித்து, ஊதுவர்த்தி கொளுத்தி, ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராமத்து ஆண்கள் பலரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மீண்டும் கடைகளை திறந்தால் கடுமையான போராட்டங்களைச் சந்திக்க வேண்டிவரும் என டாஸ்மாக் பணியாளர்களை பெண்கள் எச்சரித்துச் சென்றனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT