தமிழகம்

நிலம் சட்டத்துக்கு அதிமுக ஆதரவளித்த விவகாரம்: நீதிமன்றச் செயல்பாட்டில் பாஜக தலையிடாது - ஹெச். ராஜா கருத்து

செய்திப்பிரிவு

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அதிமுக ஆதரித்ததற்கும், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நீதிமன்றச் செயல்பாடுகளில் பாஜக எந்தக் காலத்திலும் தலையிடாது என அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்தார்.

மதுரையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

காங்கிரஸ் ஆட்சியில் சுரங்கங் களை ஒதுக்கீடு செய்ததில் உத்தேச மாக ரூ.15 லட்சம் கோடி அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள வருவாயில், மாநில அரசுக்கு ராயல்டி தருவதால் பொருளாதாரப் பரவல் ஏற்படும். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்படுவதை திமுக எதிர்ப்பதன் மூலம், அடிப்படைக் கொள்கையை அக்கட்சி கைவிட்டுவிட்டது.

விவசாயிகளின் கோரிக்கை களுக்கு மதிப்பளித்து, மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பட்ஜெட்டில் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. இவர்களிடம் ரூ.4 லட்சம் கோடிக்கும் மேல் வருமானம் பெறத்தான் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 13 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு, 12 ரூபாய் காப்பீட்டுக்கு ரூ. 2 லட்சம், ரூ.330-க்கு ஆயுள் காப்பீடு என ஏழைகளுக்குத்தான் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

தாலி தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிவித்துள்ள போராட்டம் தேவையற்றது. எந்தவொரு மதத்தினரும் புனிதமாகக் கருதும் விஷயங்களில் மற்றவர்கள் தலையிட உரிமை கிடையாது.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் காரணமாகத் தான் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அதிமுக ஆதரித்தது என்பதை ஏற்க முடியாது. பெங்களூர் நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்பே ஜெயலலிதாவை மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், வெங்கைய நாயுடு ஆகியோர் சந்தித்துள்ளனர். இதன் பின்னர் தீர்ப்பு வந்தது. நீதிமன்ற செயல்பாட்டில் எந்த காலத்திலும் பாஜக தலையிடாது.

1999-ம் ஆண்டில் பாஜக கூட்டணியில் 23 கட்சிகள் இருந்தன. தற்போது 4 கட்சிகளே உள்ளன. நாளைக்கே இந்த எண்ணிக்கை உயரலாம். கூட்டணியிலிருந்து மதிமுக தானாகவே வெளியேறியது. பாமக நிலையை அக்கட்சிதான் அறிவிக்க வேண்டும். எந்த கட்சியையும் கூட்டணியிலிருந்து பாஜக வெளியே அனுப்பாது. நியூட்ரினோ திட்டம் குறித்து மத்திய அரசு முழுமையாக ஆய்வு செய்து வருகிறது. ஆயுதம் ஏந்தி யார் போராடினாலும் ஆயுள் முழுக்க சிறையில்தான் இருக்க வேண்டும்.

புதுடெல்லியில் தேவாலயம் மீது தாக்குதல் நடந்ததுபோன்ற சம்பவத்தை, தமிழகம் முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை மத்திய, மாநில உளவுத்துறை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT