தமிழகம்

ஏழை தொழிலாளிக்கு சிக்கலான இதய அறுவைச் சிகிச்சை: செட்டிநாடு மருத்துவமனை சாதனை

சி.கண்ணன்

ஏழை தொழிலாளிக்கு மிகவும் அரிய சிக்கலான இதய அறுவைச் சிகிச்சை செய்து செட்டிநாடு ஹெல்த் சிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சாதனைப் படைத்துள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (50). வெல்டிங் வேலை செய்து வருகிறார். மனைவி மற்றும் மகள் உள்ளனர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக அதிகப்படியான சோர்வு, சுவாசிப்பதில் பிரச்சினை மற்றும் நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக அவரால் சரியாக வேலையும் செய்ய முடியவில்லை. இரவில் தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ரமேஷ்குமார் சிகிச்சைக்காக சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்ததில், இதயத்தின் இடது பக்கம் மற்றும் வலது பக்க வால்வுகள் சுருங்கியும், உடலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் பெரிய ரத்தக்குழாய் ஒரு பகுதி வீங்கியும், 2 ரத்தக்குழாய்களில் அடைப்பும் மற்றும் இதயத்தில் சிறிய ஓட்டை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் கடந்த மாதம் 24-ம் தேதி பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து 2 ரத்தக்குழாயில் இருந்த அடைப்பை சரிசெய்தனர். அதன்பின் சுருங்கியிருந்த இடது பக்க வால்வை அகற்றிவிட்டு, செயற்கையாக வால்வை பொருத்தினர். சுருங்கியிருந்த வலது பக்க வால்வை சரிசெய்து விரிவடையச் செய்தனர். வீங்கியிருந்த ரத்தக்குழாயின் பகுதியை மட்டும் அகற்றிவிட்டு, அந்த இடத்தில் செயற்கையாக ரத்தக்குழாயை பொருத்தினர். இறுதியாக இதயத்தின் இருந்த சவ்வை எடுத்து ஓட்டையை அடைத்தனர். சிகிச்சைக்கு பிறகு ரமேஷ்குமார் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக செட்டிநாடு ஹெல்த் சிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர்கள் ஆறுமுகம், பிரதிப் நாயர், சஞ்செய் தியோட்டர், பிரபு ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி:

ரமேஷ்குமாருக்கு இருந்த 5 பிரச்சினைகளையும் ஒரே நேரத்தில் அறுவைச் சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டது. சுமார் 4 மணி நேரம் நடந்த அறுவைச் சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு, அவருடைய உடல்நிலை நன்றாக இருக்கிறது. ரமேஷ்குமார் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பேட்டியின் போது செட்டிநாடு ஹெல்த் சிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) அஸ்வின் உடன் இருந்தார்.

SCROLL FOR NEXT