தமிழகம்

தோல்விக்காக தற்கொலை கூடாது: ஞானதேசிகன் அறிக்கை

செய்திப்பிரிவு

தோல்வியால் துவண்டு, விலைமதிப்பில்லா உயிரை மாய்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினரை ஞானதேசிகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காங்கிரஸ் கட்சியின் செந்துறை வட்டாரத் தலைவர் சந்திர சேகரின் மகனும் பெரம்பலூர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான வினோத்குமார், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால் விரக்தி அடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார் என்பதை அறிந்து மிகுந்த துன்பம் அடைந்தேன். அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

வெற்றி, தோல்வி என்பது இன்றைய ஜனநாயகத்தில் இயற்கையானது. தோல்வி கண்டு துவண்டு விலைமதிப்பில்லா உயிரை மாய்த்துக் கொள்வதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

தோல்வியால் விரக்தி

சிதம்பரம் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வள்ளல் பெருமான் தோல்வியடைந்ததால், வினோத்குமார் மன வேதனையில் இருந்துள்ளார். இதனால், வெள்ளிக்கிழமை மாலை மதுவுடன், சில மாத்திரைகளை விழுங்கினாராம். மேலும், வீட்டில் தூக்கிட்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மயங்கிய நிலையில் கிடந்த வினோத்குமாரை மீட்ட குடும்பத்தினர், ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக இரும்புலிக்குறிச்சி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT