திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரில் பலசரக்கு கடை வைத்திருந்தவர் அப்துல் ரஜாக். கடந்த பிப்.20-ல் முத்துப்பேட்டை தர்ஹா கந்தூரி விழாவின்போது, தனது கடைக்கு முன்பு உள்ள சாலையில் கிடந்த ஒரு கைப் பையை கண்டெடுத்தார்.
அதனைத் திறந்து பார்க்காமல், தனது மகனும், தவ்ஹீத் ஜமாத்தின் முன்னாள் மாவட்டத் தலைவருமான அன்சாரியிடம் ஒப்படைத்து, யாரும் தேடி வந்தால் கொடுத்து விடும்படி கூறியுள்ளார். அவரும் அதனை திறந்து பார்க்காமல் கடையில் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டார்.
இந்நிலையில் பணப் பையை கண்டெடுத்த அப்துல் ரஜாக், மார்ச் 1-ல் மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டார்.
நீண்ட நாட்களாகியும் யாரும் கேட்டு வராததால், நேற்று முன்தினம் அந்தப் பையை அன்சாரி திறந்து பார்த்தபோது அதில் 500 ரூபாய் நோட்டுகளாக ரூ.40 ஆயிரம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. அதில் நாகை மாவட்டம், திருப்பூண்டியில் உள்ள ஒரு வங்கிக்கு செலுத்த வேண்டிய ரசீதும் இருந்தது.
இதையடுத்து, திருப்பூண்டி தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு சம்மந்தப்பட்ட வங்கியிடம் விசாரித்தபோது, அந்தப் பை, திருப்பூண்டி நெய்னா முகம்மது மகன் உசேன் ஷா (60) என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.
உடனே, முத்துப்பேட்டை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் உசேன்ஷாவை முத்துப்பேட்டைக்கு நேற்று வரவழைத்து, அவரிடம் கைப் பை மற்றும் பணத்தை ஒப்படைத்தனர். உசேன்ஷா மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக்கொண்டார். இச்செய்தியை கேள்விப்பட்ட பொதுமக்கள் அன்சாரி மற்றும் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளை பாராட்டினர்.