பொள்ளாச்சி அருகே வெடி தயா ரித்தபோது ஏற்பட்ட விபத்தில் ஒரு சிறுமி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
ஆழியாறை அடுத்த அங்கலக் குறிச்சியில் பழனிச்சாமி என்பவர் வீட்டில் வசிப்பவர் அழுக்குச்சாமி. பரம்பரையாக வெடி தயாரித்து வரும் இவர், திண்டுக்கல்லிலிருந்து வெடி மருந்துகள் வாங்கி வந்து வாணவேடிக்கைக்குரிய வெடிகளைத் தயாரித்து வந்துள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் - கவிப்பிரியா என்ற தம்பதியும் கிரி என்பவரது மகள் ஜெயயும் அழுக்குச்சாமிக்கு உதவியாக வெடி தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை அழுக்குச்சாமி வெடி தயாரிப்பில் இருந்தபோது விபத்து ஏற்பட்டு, வீடு மொத்தமும் வெடித்துச் சிதறியது. இதில் கவிப்பிரியாவின் உடல் உறுப்புகள் தனித் தனியே சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு சென்று குடியிருப்புகளுக்கு நடுவே விழுந்துள்ளது.
சிறுமி ஜெயஸ்ரீ வீட்டின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் அழுக்குச்சாமி மற்றும் பிரபாகரனையும் அருகிலிருந்தவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இருவரும் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வெடிவிபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
வெடி தயாரிக்க உரிமம் பெற்ற முகவரியிலிருந்து அழுக்குச்சாமி வீடு மாற்றலாகி வந்து இரண்டு மாதங்கள் ஆவதால், இப்போதுள்ள வீட்டின் பெயரில் அவர் உரிமம் பெறவில்லை. மேலும் வெடி விபத்து நடந்த இடத்தில் ஏராளமான திரி, கலர் காகிதங்கள், வெள்ளைக் கற்கள் கிடந்தது தெரியவந்துள்ளது. எனவே நாட்டுவெடி ஏதேனும் தயாரிக்க முயன்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வெடிவிபத்து குறித்து விசாரித்து வரும் ஆழியாறு போலீஸார், வெடிமருந்து தடுப்புப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.