ஓமலூர் அருகே பட்டப்பகலில் அடகு கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை கட்டிப் போட்டு, கத்தி முனையில் மிரட்டி 350 பவுன் நகை, ரூ.4.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 5 பேர் கொண்ட மர்ம கும்பலை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம் (71). இவரது மனைவி கண்ணம்மாள் (63). இவர்களது மகன்கள் இருவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். பொன்னுரங்கம், மனைவியுடன் பூசாரிப்பட்டியில் தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமான திருமண மண்டபம், வணிக வளாகம், அடகு கடையுடன் வீடு அமைந்துள்ளது.
நேற்று மதியம் தம்பதியர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல், வீட்டுக்குள் அதிரடியாக புகுந்தது. தம்பதியரை கட்டிப்போட்டு, கண்ணம்மாளை கத்தியால் கையில் கிழித்து காயப்படுத்திய கொள்ளை கும்பல், நகை, பணம் இருக்குமிடத்தை கேட்டு மிரட்டியுள்ளது.
இதில் அச்சமடைந்த பொன்னுரங்கம் நகை, பணம் இருக்கும் இடத்தை காட்டியுள்ளார். அடமான நகை 350 பவுன், ரொக்கம் 4.50 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு மர்ம கும்பல் தலைமறைவானது.
பின், வீட்டுக்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். வீடு முழுவதும் ரத்தம் வழிந்திருந்ததை கண்டு காப்பாற்ற வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கொள்ளையர்களால் கட்டிப் போடப்பட்டு இருந்த இருவரையும் மீட்டு, தீவட்டிபட்டி போலீஸுக்கு தகவல் அளித்தனர்.
சேலம் சரக டிஐஜி வித்யா குல்கர்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி, ஓமலூர் டிஎஸ்பி உதயகுமார் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்கள் தப்பிச் சென்ற வழித்தடத்தை மோப்ப நாய் மூலம் கண்டறிந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட வீட்டில் இருந்து மூன்று செல்போன்களை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் எடுத்துச் சென்ற செல்போன்களின் டவர், சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா அருகே காட்டியது. இதையடுத்து, சேலம் காவல் துணை ஆணையர் பிரபாகரன் தலைமையில் 50 போலீஸார் குரும்பப்பட்டி வன உயிரியல் காப்புக்காடு பகுதியில் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.