தமிழகம்

மதிப்பு கூட்டு வரியில் சட்ட திருத்தம்: மசோதா தாக்கல்

செய்திப்பிரிவு

2015-2016-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.650 கோடிக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதை அமல்படுத்தும் வகையில் 2006-ம் ஆண்டு மதிப்புக் கூட்டு வரி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான சட்டமசோதாவை பேரவையில் நேற்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிமுகம் செய்தார்.

பேரவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2015-2016-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் ரூ.650 கோடிக்கு வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, அனைத்து வகையான கொசு வலைகளுக்கு வரி விலக்கு, நெய்தலுக்கு முன்பாக நூலுக்கு பசையிடுவது தொடர்பான ஒப்பந்தப் பணிகளுக்கு வரி விலக்கு, மீன்பிடி கயிறுகள், மீன்பிடி மிதவைகள், மீன்வலை முறுக்கு நூல், மீன்பிடி விளக்குகள், மீன்பிடி திருப்புகை போன்ற மீன்பிடிப்புக்கு பயன்படும் துணைப் பொருட்கள் மீதான வரி விலக்கு,

மாநிலங்களுக்கு இடையேயான விற்பனையை ஊக்குவிப்பதற்காக 3 சதவீத உள்ளீட்டு வரி திருப்பத்துக்கு (input tax credit reversal) விலக்கு, ஏலக்காய் மீதான வரி 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைப்பு, எல்.இ.டி. விளக்குகள் மீதான வரி 14.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு உள்ளிட்ட வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

இந்த வரிச் சலுகை அறிவிப்புகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் 2006-ம் ஆண்டு மதிப்புக் கூட்டு வரி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவை பேரவையில் நேற்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிமுகம் செய்தார்.

SCROLL FOR NEXT