கொட்டிவாக்கம் கடற்கரையில் நடமாடும் கழிப்பறை நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய அமர்வில் மாநகராட்சி சார்பில் நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொட்டிவாக்கம் கடற்கரை பகுதியில் அங்கு குடியிருக்கும் மீனவர்களுக்கான கழிப்பறை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டது. கடலோர ஒழுங்குமுறை ஆணைய விதிகளை மீறி, 500 மீட்டருக்குள் கழிப்பறை கட்டப்பட்டதாக வும், அதை அகற்றவும் தேசிய பசுமை தீர்ப்பாய தென்னிந்திய அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த அமர்வு, கடற்கரையோரம் கட்டப்பட்ட கழிப்பறைகளை இடித்துவிட்டு, நடமாடும் கழிப்பறையை நிறுத்த உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் எம்.சொக்கலிங்கம், தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணை ஒத்திவைப்பு
அப்போது, மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடற்கரையோரம் கட்டப்பட்ட கழிப்பறை இடிக்கப்பட்டதாகவும், அங்கு நடமாடும் கழிப்பறை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் அமர்வின் உறுப்பினர்கள், மனு மீதான அடுத்த விசாரணையை மே 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.