கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு 10 மடங்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமகவின் வேளாண் நிழல் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு வேளாண் வளர்ச்சித் திட்டங்களை பரிந்துரைக்கும் நோக்கத்தில், பாமக 2008-ஆம் ஆண்டு முதல் வேளாண்மைக்காக தனியாக நிழல் நிதிநிலை அறிக்கைத் தயாரித்து வெளியிட்டு வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் 2015-16 ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை சென்னையில் இன்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.
அதில், '2015 - 2016 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் திட்ட ஒதுக்கீடு ரூ.48,815 கோடியாக இருக்கும். இதில் மிக அதிக அளவாக ரூ.13,688.20 கோடி, அதாவது 28% நிதி வேளாண்துறை திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் வேளாண்துறைக்கான திட்ட ஒதுக்கீடு இந்த அளவுக்கு நிர்ணயிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேச அளவில் நிலம் கையக்கப்படுத்தும் சட்டம் கடுமையாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக பாமகவின் நிழல் பட்ஜெட்டில் இடம்பெற்ற அம்சங்கள்:
* தமிழகத்தில் உள்ள நிலங்கள் விரிவான முறையில் மண் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, வேளாண்மைக்கு ஏற்ற நிலம், வேளாண்மைக்கு பயன்படாத நிலம் என்று வகைப்படுத்தப்படும். வேளாண்மைக்கு பயன்படாத நிலங்களை மட்டுமே தொழிற்சாலைகள் அல்லது வீடு கட்டும் தேவைக்காக கையகப்படுத்த முடியும்.
* வேளாண்மைக்கு ஏற்ற, பல்வகைப் பயிர்கள் விளையும் நிலங்கள் அமைந்துள்ள பகுதிகள் பட்டியல் பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும். அந்த நிலங்களை எக்காலத்திலும் கையகப்படுத்த முடியாது; அதே நேரத்தில் அதன் உரிமையாளர் நினைத்தால் விற்பனை செய்ய முடியும்.
* ஒரு கிராமத்தில் நிலம் எடுப்பதாக இருந்தால், அங்கு கிராம சபையைக் கூட்டி, அதில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
* நிலங்களை கையகப்படுத்த கிராமசபையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டால், நிலம் எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
* கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு 10 மடங்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதில் 5 மடங்கு பணமாகவும், 5 மடங்கு சம்பந்தப்பட்ட நிலத்தில் தொடங்கப்படவுள்ள நிறுவனத்தின் பங்குகளாகவும் வழங்கப்பட வேண்டும்.
* கையகப்படுத்தப்படும் நிலப்பரப்புக்கு ஏற்ற வகையில் நிலம் வழங்கியவரின் குடும்பத்திற்கு (உதாரணமாக 2 ஏக்கருக்கு ஒரு வேலை) வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
* கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் அமைக்கப்படும் தொழிற்சாலையின் இயக்குனர்கள் குழுவில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு அந்த ஆலைக்கு நிலம் வழங்கியவர்களின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும்.
* கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 3 ஆண்டுகளில் தொழில் தொடங்கப்பட வேண்டும். அவ்வாறு தொழில் தொடங்கப்படாவிட்டால், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு பாமகவின் நிழல் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.