தமிழகம்

கதர் ஆயத்த ஆடைகளை உருவாக்கும் பல்கலை. மாணவிகள்

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மேலைநாட்டு கலாச்சார மோகத்தால் வரவேற்பை இழந்த கதர் ஆடைகளை பிரபலப்படுத்த, திண்டுக்கல் காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழக மாணவிகள் புதிய வடிவமைப்புகளில் உருவாக்கிய ஆயத்த (ரெடிமேடு) கதர் ஆடைகள் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு கதர் ஆடைகளே ஏற் றவை. அவை, உடலுக்கு கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் இதமாகவும் இருக்கும். வியர்வையை உறிஞ்சி காற்றோட்டத் தையும், ஈரப்பதத்தையும் கடத்தும். ஆனால், மேலைநாட்டு கலாச்சார மோகத்தால் கதர் ஆடைகள் பொதுமக்களிடம் பெரிய கவனத்தை யும், வரவேற்பையும் பெறவில்லை.

இந்நிலையில், காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழக மனையியல் துறையின் டெக்ஸ்டைல்ஸ்- பேஷன் டிசைன் பிரிவு மாணவிகள், கதர் ஆடைகளைப் பிரபலப்படுத்தும் நோக்கில், புதிய கண்ணோட்டத்தில் ரெடிமேட் கதர் ஆடைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட் டுள்ளனர்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற பேஷன் ஷோவில், இந்த மாணவிகள் வடிவமைத்த ரெடிமேட் கதர் ஆடைகள் முதல் பரிசைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

இதுகுறித்து பல்கலைக்கழக மனையியல் துறை டெக்ஸ்டைல்ஸ்- பேஷன் டிசைன் பிரிவு இணைப் பேராசிரியர் சத்யா கூறியதாவது:

கதரில் போதிய வடிவமைப்புகளில் ஆடைகள் இல்லாததே பொதுமக்களிடம் வரவேற்பு இல்லாததற்குக் காரணம். ஆண் களுக்கான குர்தா, சட்டை, பெண் களுக்கான சேலைகள் ஆகியவை மட்டுமே கதரில் பெரும்பாலும் கிடைக்கும்.

குழந்தைகள், கல்லூரி மாணவி கள், நவீன ஆடைகளை விரும்புவோர் ஆகியோருக்கு போதிய ஆடைகள், போதிய வடிவமைப்புகளில் கதரில் ரெடிமேடாக கிடைப்பதில்லை.

எனவே, கதர் துணியில் பாரம்பரிய ஆடைகள், அலங்கரிக்கப்பட்ட புதிய வடிவமைப்பு ஆடைகள், எம்ப்ராய்டரி மற்றும் கை ஓவி யம் தீட்டப்பட்ட ஆடைகள், வித விதமான பேஷன் ஆடைகளை ரசனைக்கு ஏற்ப உருவாக்கும் முயற் சியில் பல்கலைக்கழக மாணவிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, சல்வார், சுடிதார், மேலாடை குர்தா, பிறந்த குழந்தை களுக்கான ஜப்லா, சானிடரி நாப் கின், இரவு நேர ஆடைகள், பேஷன் ஆடைகள் ஆகியவற்றை கதர் துணி யில் வடிவமைத்து விற்பனைக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

மக்களின் விருப்பத்துக்கேற்ப இந்தியக் கலாச்சார சாயலில் ரெடி மேட் கதர் ஆடைகளை வடிவமைத்து (காபி ஓவியம், கை ஓவியம், புதிய வடிவமைப்பு), தற்போது பேஷன் ஷோவிலும் எங்கள் மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகரிக்கும் கதர் ஆடை விற்பனை

“மத்திய கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையத் துறையின் 2013-14ம் ஆண்டு அறிக்கையின்படி 2010-11ம் ஆண்டில் ரூ.673 கோடி, 2011-12ம் ஆண்டில் ரூ. 716.98 கோடி, 2012-13ம் ஆண்டில் ரூ.761.93 கோடி, 2013-14ம் ஆண்டில் ரூ.809.70 கோடிக்கு கதர் ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

விற்பனையைப் பொருத்தவரை மேற்கண்ட காலத்தில் முறையே ரூ.917.26 கோடி, ரூ.967.87 கோடி, ரூ.1,021 கோடி, ரூ.1079.24 கோடிக்கு கதர் ஆடைகள் விற்பனை ஆகியுள்ளன.

கதர் உற்பத்தியில் தொழில்நுட்பம், அலங்காரம், சாயம், அழகுபடுத்தும் உத்திகள், வெவ்வேறு மாநில மக்களின் கலாச்சாரம், தனித்துவம் ஆகியன வடிவமைப்புகளிலும், அச்சிடப்படும் டிசைன்களிலும் பிரதிபலிப்பது ரெடிமேடு கதர் ஆடைகளின் சிறப்பு” என்று இணைப் பேராசிரியர் சத்யா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT