தமிழகத்தில் கிராமங்களிலும் நகரங்களிலும் 'தூய்மை இந்தியா' இயக்கத்தைச் செயல்படுத்த மொத்தம் ரூ.350 கோடியை மாநில அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது.
இது தொடர்பாக, 2015-16 பட்ஜெட்டில் முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பு:
அனைவரும் எதிர்நோக்கியுள்ள கிராமப்புறத் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், மத்திய அரசு கணிசமான நிதியுதவி வழங்கும் என நம்புகிறோம். இந்த அரசு 'தூய்மை கிராமம்' இயக்கத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளதோடு கிராமப்புறங்களில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளைச் செயல்படுத்த ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் நிதியை பகிர்வு மானியத்திலிருந்து ஒதுக்கீடு செய்துள்ளது.
குப்பைகளைப் பிரித்து மறுசுழற்சி செய்தல் போன்ற அனைத்து திடக்கழிவு மேலாண்மையையும் முக்கிய அம்சங்களாகக் கொண்ட முன்மாதிரி தூய்மை கிராமங்களை உருவாக்கும் ஒரு ஒருங்கிணைந்த திட்டம், சோதனை அடிப்படையில் 2,000 ஊராட்சிகளில் 2015-2016 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும்.
மேலும், 2015-2016 ஆம் ஆண்டில் கிராமப்புறத் தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் 15 லட்சம் வீட்டுக் கழிப்பறைகள் அமைக்கப்படும். வரும் நிதியாண்டில் கிராமப்புறத் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, கிராமப்புறத் தூய்மை இந்தியா இயக்கத்தை செயல்படுத்துவதற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திறந்த வெளியில் மலம் கழிக்கும் சூழல் இனி இல்லை
திறந்த வெளியில் மலம் கழிக்கும் சூழல் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளை எய்திடும் வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் 137.52 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இக்குறிக்கோளை எய்துவதில் இந்த அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு மத்திய அரசின் தூய்மை இந்தியா இயக்கம் உறுதுணையாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.
2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், நகர்ப்புரங்களில் தூய்மை இந்தியா இயக்கத்தை செயல்படுத்துவதற்காக 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகரங்களின் கட்டமைப்புக்கு...
தமிழ்நாட்டில் உள்ள 12 மாநகராட்சிகளையும் திறன்மிகு நகரங்கள் திட்டத்தில் சேர்ப்பதற்கான மத்திய அரசின் ஒப்புதலை எதிர்நோக்கி, இந்த அரசு 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும், ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு மேல் உள்ள அனைத்து நகரங்களிலும் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக மத்திய அரசு செயல்படுத்த உத்தேசித்துள்ள தேசிய நகர்ப்புர வளர்ச்சி இயக்கத்திற்காக 2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.