தமிழகம்

கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்கள் கைகலப்பு

செய்திப்பிரிவு

கோவை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தின் போது திமுக - அதிமுக கவுன்சிலர்கள் சரமாரியாக மோதிக்கொண்டு கைகலப்பில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மாநகராட்சியின் 2015-2016-ம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டக் கணக்கை தாக்கல் செய்வதற்கான மாமன்ற சிறப்புக் கூட்டம் மேயர் பி.ராஜ்குமார் (அதிமுக) தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், திமுக , அதிமுக கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

இதில் திமுக கவுன்சிலர் மீனா லோகு, நெற்றியில் நாமத்துடன் பங்கேற்றார். அதிமுக கவுன்சிலர்கள் திமுகவை தாக்கி பதாகையில் எழுதி கழுத்தில் தொங்கவிட்டு, திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பதிலுக்கு, திமுக உறுப்பினர்களும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விமர்சித்து முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது, ஜெயலலிதாவை விமர்சித்து '' உலகிலேயே எந்த முதலமைச்சரும் செய்யாத அளவுக்கு மெகா ஊழல் செய்து சிறை சென்ற ஜெயலலிதா'' ஒரு பேப்பரில் திமுக கவுன்சிலர் மீனா லோகு எழுதத் தொடங்கினர். இதைப் பார்த்த அதிமுகவினர், அவரிடமிருந்த அந்த பேப்பரை பறிக்கும் முயற்சியில் கோபத்துடன் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குறிப்பாக, திமுக கவுன்சிலர் மீனா லோகுவும், அதிமுக கவுன்சிலர் அன்னம்மாளும் சரமாரியாக அடித்துக் கொண்டனர். இந்த மோதலால், மன்றக் கூட்டத்தின் செயல்பாடு சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

மன்றக் கூட்டத்தில் இருந்து வெளியேறிய மீனா லோகு, தான் பெண் கவுன்சிலர் என்றும் பாராமல் அதிமுக ஆண் கவுன்சிலர்களும் சேர்ந்து தாக்கியதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றார்.

இதேபோல், தன்னை திமுக கவுன்சிலர்கள் தாக்கிவிட்டதாகக் கூறி அன்னம்மாளும், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றார்.

SCROLL FOR NEXT