திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் விழிப்புணர்வு கூட்டம், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. மாவட்ட தலைவர் அ.இளங்கோவன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசும்போது, “பன்னாட்டு நிறுவனங்களுக்கான ஆட்சியாக, மோடியின் ஆட்சி உள்ளது. ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காக அவர் ஆட்சி நடத்தவில்லை. அனைத்துத் துறைகளிலும் ஏழைகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற நாட்டை, மதச்சார்பு உள்ள நாடாக மாற்ற முயற்சி செய்கின்றனர்.
அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. அந்த கருத்து சுதந்திரத்துக்கு மதவாத சக்திகள் அச்சுறுத்தலாக உள்ளன. சென்னையில் வரும் 14-ம் தேதி தாலி அகற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது” என்றார்.
பின்னர் அவர் கூறும்போது, “காவிரி நதியின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கியுள்ளது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக, காவிரி மேலாண்மை வாரியத்தை பாஜக அரசு அமைக்காமல் இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. கர்நாடகாவில் அனைத்துக் கட்சிகளும் ஒன்று கூடி உள்ளது போல், தமிழகத்தில் அனைவரும் ஒன்று கூடி அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்” என்றார்.