மார்ச் 22: உலக தண்ணீர் தினம்
பூமியின் பரப்பளவில் இருக்கும் மொத்த தண்ணீரின் அளவு 100 லிட்டர் என்று வைத்துக்கொண்டால், அதில் நமக்கு பயன்படும் நன்னீரின் அளவு வெறும் 0.003 லிட்டர் மட்டுமே. அதனால்தான் தண்ணீரை திரவத் தங்கம் (லிக்விட் கோல்டு) என்று அழைக்கின்றனர்.
எதிர்காலத்தில் யுத்தங்கள் நிகழ்ந்தால் அவை பெரும்பாலும் தண்ணீருக்கானதாக இருக்குமென அறிவியலாளர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர். பெருகிவரும் மக்கள்தொகை, நகர்மயமாதல், காடுகளின் பரப்பளவு குறைதல், தொழிற் புரட்சி போன்ற தவிர்க்க இயலாத காரணங்களால் சுற்றுச்சூழல் மாசடைந்து, பூமியின் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த மாற்றத்தால் வரும் காலங் களில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கடும் வறட்சியைச் சந்திக்கும் இக் கட்டான சூழலுக்கு நாம் தள்ளப்பட் டுள்ளோம். தண்ணீரின் தேவை அதிக மாகி, அதன் தரமும் குறைந்து, நீர் இருப்பு அரிதாகி வரும் இத்தகைய காலகட்டத்தில் கிடைக்கும் நன்னீரை திறமையுடன் நிர்வகிப்பது அவசிய மும், அவசரமானதும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதுகுறித்து தமிழக இயற்கைப் பாதுகாப்பு சங்க தலைவர் வ.சுந்தரராஜூ ‘தி இந்து’விடம் கூறியதா வது: ‘‘தமிழக அரசின் புள்ளியியல் கணக்கின்படி, 50 ஆண்டுகளுக்கு முன் ஆறு, குளம், ஏரி, கிணறுகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 70 ஆயிர மாக இருந்தது. இதில் 60 சதவீதம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட வைகளால் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. தற்போது 2 லட்சத்து 28 ஆயிரம் நீர்நிலைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.
கடந்த தலைமுறை விவசாயிகள் 20 அடி ஆழத்தில் நீர் இறைத்து விவசாயம் செய்தனர். மின் மோட்டார் பயன்படுத்தத் தொடங்கிய 1963-ம் ஆண்டில் இருந்தே படிப்படியாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து 60 அடிக்கு கீழே செல்ல ஆரம்பித்தது. தற்போது அதிக குதிரை சக்தித் திறன்கொண்ட மின் மோட்டார்களை வீடு மற்றும் விவசாயத்துக்கு பயன் படுத்த தொடங்கியதன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் 400 அடி முதல் 800 அடி என அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது.
தமிழகத்தில் 17 முக்கிய ஆறுகளும் 61 நீர்த்தேக்கங்களும், 41 ஆயிரம் ஏரிகளும் உள்ளன. இதன் மூலம் 2001-ல் 46 ஆயிரத்து 540 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் கிடைத்தது. ஆனால், அப்போதைய நீரின் தேவை 54 ஆயிரத்து 395 மில்லியன் கன மீட்டர். இது 2050-ல் 57 ஆயிரத்து 725 மில்லியன் கன மீட்டராக உயருமென கணக்கிடப்பட்டுள்ளது. இதில் குடிநீர் தேவை மட்டும் 3 ஆயிரத்து 460 மில்லியன் கன மீட்டராக உயர வாய்ப்புள்ளது.
இதுபோன்ற பற்றாக்குறையை சமாளிக்க மழைப் பொழிவுக்கு துணை புரியும் காடுகளைக் காப்பாற்ற வேண்டும். மரம் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மழைநீர் சேமிப் புக்கு ஆதாரமான ஆறு, ஏரி, குளம், கண்மாய், கால்வாய்களை நல்ல முறையில் பராமரிப்பதுடன் ஆக்கிரமிப்பு சக்திகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.
தமிழகத்தில் நீர்நிலைகளை மாசு படுத்தும் 3 ஆயிரத்துக்கும் அதிக மான தொழிற்சாலைகள் செயல்படு கின்றன. இவை ஒரு நாளைக்கு 6 லட்சம் லிட்டர் கழிவுகளை நேரடியாக ஆறுகளில் கலக்கின்றன. இவை மட்டுமல்லாது கங்கை முதல் காவிரி வரை அனைத்து ஆறுகளுமே பாரபட்சமின்றி குப்பை, பிளாஸ்டிக் கழிவு, சாக்கடை என்று மாசுபடுதலின் உச்சகட்டத்தில் உள்ளன. ஆகவே, நாம் எதிர்கொள்ள இருக்கிற தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க தண்ணீர் சிக்கனம் மட்டும் போதாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுத்து, நன்னீர் கிடைக்க ஒவ்வொரு தனி மனிதனும் உறுதியுடன் செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும்’’ என்றார்.