அரசு பெண் டாக்டரை தாக்கிய செவிலியரை பணிநீக்கம் செய்யக் கோரி, தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் ஆலங் குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த அரசு பெண் டாக்டர் ஆடலரசியை தாக்கிய, கிராம சுகாதார செவிலியர் இந்திராவை பணிநீக்கம் செய்ய வேண்டும். பணியிட மாற்றம் செய்யப்பட்ட டாக்டர் ஆடலரசியை மீண்டும் அதே இடத்தில் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக் கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவ மனைகளில் டாக்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் தலைமையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலையில் நடந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். “எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து சங்கத்தின் பொதுக் குழுவில் முடிவு எடுக்கப்படும்” என்று பி.பாலகிருஷ்ணன் கூறினார்.
சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் டாக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் 150 மேற்பட்ட டாக்டர்கள் சைதாப்பேட்டையில் உள்ள மாவட்ட இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.