தமிழகம்

நிதி ஆதாரங்கள்: சொந்த பலத்தை நம்பும் நிலையில் தமிழகம்

செய்திப்பிரிவு

பட்ஜெட்டுக்கான நிதி ஆதாரங்களில் சொந்த பலத்தையே எதிர்காலத்தில் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக பட்ஜெட் உரையில் 2015-2016 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள செலவினங்களை மேற்கொள்ளவதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து அவர் அளித்த விளக்கம்:

மாநிலத்தின் மொத்த வருவாயில் பெரும்பகுதி மாநில அரசின் சொந்த வரிவருவாயே ஆகும். வணிக வரிகள், வாகனங்கள் மீதான வரிகள், ஆயத் தீர்வை, முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு ஆகியன மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் முக்கியமானவை ஆகும்.

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சொந்த வரி வருவாய் வளர்ச்சியின் மந்தநிலை பெரும் சவாலாக உள்ளது. நாட்டின் பொருளாதாரச் சூழ்நிலையில், குறிப்பாக உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையினால் வணிக வரி வசூல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம் ஆகும்.

2014-2015 ஆம் ஆண்டு சர்வதேச கச்சா எண்ணெயின் விலை குறைந்ததால் ஏற்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலை மாற்றத்தால் வணிக வரி வசூல் எதிர்பார்த்த அளவை விட 1,000 கோடி ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது.

இப்பொருட்களின் தற்போதைய விலை அடிப்படையில், 2015-2016 ஆம் ஆண்டில் 2,141 கோடி ரூபாய் அளவிற்கு வணிக வரி வசூல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு பெரிய வரி இழப்பைச் சந்தித்த போதிலும், பெட்ரோலியப் பொருட்களின் மீதான மதிப்புக் கூட்டுவரியை சில மாநிலங்கள் உயர்த்தியுள்ளது போல, நமது மாநிலத்தில் வரியை இந்த அரசு உயர்த்தவில்லை. மற்ற இனங்களிலும், வசூலில் போதிய வளர்ச்சி

இல்லை. எனவே, 2014-2015 ஆம் ஆண்டில் ஏற்கனவே இலக்கிடப்பட்ட அளவிற்கு குறைவாகவே மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் மொத்த வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், 2014-2015 ஆம் ஆண்டில் திருத்த மதிப்பீடுகளில் மொத்த வரி வருவாய்வசூல் இலக்கு 85,772.71 கோடி ரூபாய் என குறைக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் வரி அல்லாத வருவாயை உயர்த்துவதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே இருப்பதால் அதற்கேற்ப இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மத்திய வரிகளில் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் பங்கும், மத்திய அரசிடமிருந்து கிடைக்கப்பெறும் நிதியுதவிகளும், மாநில அரசின் வருவாயில் மற்ற இரண்டு முக்கிய நிதி ஆதாரங்களாகும். பதினான்காவது நிதி ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில், நிதிப் பகிர்வில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள பெரும் மாற்றங்கள் குறித்து ஏற்கனவே விரிவாகத் தெரிவித்துள்ளேன்.

மத்திய அரசின் வருவாயில் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியின் பங்கு 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளபோதிலும், மாநிலங்களுக்கு ஏற்கனவே மத்திய அரசால் திட்டங்கள் மூலமாக வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதால், இந்த நிதிப்பகிர்வு மாற்றத்தால் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஆதாரங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை.

நான் ஏற்கனவே குறிப்பிட்டவாறு மாநிலங்களுக்குள் நிதியைப் பகிர்ந்தளிக்கும்போது தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு மிகவும் குறைக்கப்பட்டுள்ளதால், நமது மாநிலம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இவற்றின் விளைவாக, மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வின் அளவு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், தமிழ்நாட்டிற்கான நிதிப்பகிர்வு மற்றும் மானிய உதவிகளின் மொத்த அளவு, 2014-2015 ஆம் ஆண்டு பெறப்பட்ட 39,057 கோடி ரூபாயைவிட, வரும் 2015-2016 ஆம் ஆண்டு 37,526 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

மத்திய அரசின் வரிவருவாயில் கணிக்கப்பட்டுள்ள வளர்ச்சியையும் கணக்கில் கொள்ளும்போது இந்த புதிய நிதிப்பகிர்வு முறையில் மது மாநிலம் உண்மையில் பெரும் நிதி இழப்பையே சந்திக்கிறது.

இந்த மாற்றங்களின் விளைவாக வரும் ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு 35,485 கோடி ரூபாய் அளவிற்கு மொத்த நிதி இழப்பைச் சந்திக்க நேரிடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதி ஆதாரங்கள் கிடைக்கப்பெறாத சூழலில், மத்திய அரசுத் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத் தொகையில் கூடுதல் தொகையை மாநில அரசு ஏற்று செலவிட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே, பின்தங்கிய நிலையை அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்பட்டுள்ள நிதிப்பகிர்வால் கடுமையான இழப்பைச் சந்தித்துள்ள தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு, புதியதாக அமைக்கப்பட்டுள்ள திட்ட ஆலோசனை அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள 20,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டிலிருந்து நிதி ஒதுக்கி, இந்த இழப்பை ஓரளவாவது ஈடுசெய்ய வேண்டும் என்று மத்திய அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கூறிய அனைத்தையும் கணக்கில் கொள்ளும்போது மாநிலம் தனது சொந்த பலத்தையே எதிர்காலத்தில் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

SCROLL FOR NEXT