தமிழகம்

பன்றிக் காய்ச்சலை திறம்பட கட்டுப்படுத்துகிறது அரசு: ஓபிஎஸ்

செய்திப்பிரிவு

பன்றிக் காய்ச்சல், டெங்கு மற்றும் இதர தொற்று நோய்கள் பரவாமல் இந்த அரசு திறம்படக் கட்டுப்படுத்தியுள்ளது என்று தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

2015-16-க்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம் சுகாதாரத்துறை தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அதிக எண்ணிக்கையிலான ஏழைக் குடும்பங்களுக்கு பயனளித்துள்ளது. இதுவரை, இத்திட்டத்தின் கீழ் 2,110.64 கோடி ரூபாய் செலவில் 10.05 லட்சம் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், அரசு மருத்துவமனைகள் இத்திட்டத்தின் கீழ், 764.20 கோடி ரூபாய் பெற்று, அதன் கட்டமைப்பை மேம்படுத்துவதற்குச் செலவிட்டுள்ளன.

2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்திற்கான காப்பீட்டுத் தொகைக்கு 781 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்கு பேருதவியாக இருக்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறுஉதவித் திட்டத்திற்கு 668.32 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்றே, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகத் திட்டத்திற்கு 50 கோடி ரூபாயும், மகளிர் சுகாதாரத் திட்டத்திற்கு 60.58 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சல், டெங்கு மற்றும் இதர தொற்று நோய்கள் பரவாமல் இந்த அரசு திறம்படக் கட்டுப்படுத்தியுள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வாக அனைத்து மாவட்டங்களிலும் நோய் கண்டறியும் பரிசோதனை வசதிகளை ஏற்படுத்தி, தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் நோய்க் கண்காணிப்பு அமைப்பை இந்த அரசு வலுப்படுத்தும். பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, இத்தகைய நோய்களைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கைகள் உதவும்.

SCROLL FOR NEXT