யானைகள் செல்லும் பகுதிகளில் பிளாஸ்டிக், பாலித்தீன் கழிவுப் பொருட்களை சுற்றுலாப் பயணிகள் வீசிச் செல்கின்றனர். அதை யானைகள் உட்கொண்டு மிகுந்த தொல்லைக்கு உள்ளாகி வருகின்றன.
இந்த கழிவுப் பொருட்களை அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் வீச வேண்டாம் என்றும், அவற்றை மிருகங்கள் உண்பதால் பாதிப்புக் குள்ளாகும் என்றும் பல்வேறு வழிகளில் பிரச்சாரம் செய்யப் படுகிறது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகொள்வதாக இல்லை. இதன்மீது விழிப்புணர்வு ஏற்படுத்தும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர் இயற்கை ஆர்வலர்கள் சிலர்.
வேளாண் விளைபொருட் களுக்கும், கால்நடைகளுக்கும் பயன்படுத்தப்படும் வேதி மருந்து களால் பாறு கழுகுகள் எனப்படும் பிணம் தின்னிக் கழுகுகள் அழிவு குறித்தும், அதனால் ஏற்படும் இயற்கை சுழற்சி பாதிப்புகள் குறித்தும் விவசாயிகளிடமும், பொதுமக்களிடமும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த இயற்கை ஆர்வலர்கள், அடுத்த தாக யானையின் வயிற்றுக்குள் என்னென்ன கழிவுப்பொருட்கள் இடம் பெற்றுள்ளன என்பதை படமெடுத்து போஸ்டர்களாக்கி கோவை, சத்தியமங்கலம், தாளவாடி, ஆனைமலை உள்பட கோவை மண்டலத்தில் உள்ள அனைத்து வனத்துறை சோதனை சாவடிகளிலும் ஒட்டும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர்.
இதற்காக கடந்த மூன்று நாட்கள் தொடர்ந்து முதுமலை பகுதிகளில் யானைகள் போட்டிருக்கும் சாணத்தை ஆராய்ச்சி செய்து அதில் என்னென்ன கழிவுப் பொருட்கள் உள்ளன என்பதை புகைப்படம் எடுத்து, போஸ்டர் களாக்கியுள்ளனர்.
ஆனைகட்டி, வால்பாறை, கோவை போளுவாம்பட்டி, சத்தியமங்கலம் என யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும் யானைகளின் கழிவுகளை ஆராய்ச்சி செய்து விழிப்புணர்வு போஸ்டர்களை வனத்துறை சோதனைச் சாவடிகளிலும், மக்கள் கூடும் இடங்களிலும் ஒட்ட திட்டமிட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள இக் குழுவை சேர்ந்த பாரதிதாசன் என்பவர் கூறும்போது, “முதுமலை யில் மூன்று நாட்கள் சேகரித்த யானைகளின் சாணக் கழிவுகளில் 60 சதவீதம் பாலித்தீன் பொருட் கள் உள்ளன. அதில் சீன தயாரிப்பிலான குளிர்பானப் புட்டியும் இருந்தது.
யானைகள் நகரும் இடங்களில் பிளாஸ்டிக், பாலித்தீன் கழிவுகளை வீசும் பழக்கம் அதிகரித்ததன் காரணமாக, தற்போது யானையின் கழிவுகளில் பாலித்தீன் பைகளும், பிளாஸ்டிக் பொருட்களும் இருக் கின்றன. இதனாலேயே யானை கள் குடல் நோய்களால் பாதிக் கப்பட்டு இறக்கின்றன. இந்த போஸ்டர்களை வனப் பகுதிகளில் குறிப்பாக சுற்றுலாதலங்கள் போன்று மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். அதற்காக, வனத்துறையின் அனுமதியும் கோரியுள்ளோம்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
யானையின் கழிவுகளில் பாலித்தீன் பைகளும், பிளாஸ்டிக் பொருட்களும் இருக்கின்றன. இதனாலேயே யானைகள் குடல் நோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றன.