இந்த ஆண்டு முதல் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
2015-16-க்கான தமிழக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு:
இந்த ஆண்டு முதல் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இதுவரை கடன் மற்றும் பங்கு மூலதன உதவியாக 3,105.82 கோடி ரூபாயை மாநில அரசு அளித்து தன்னுடைய பங்களிப்பை முழுமையாக நிறைவேற்றியுள்ளது.
2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இப்பணிகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுவதற்காக 615.78 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு மத்திய அரசு கடனாகவும், பங்கு மூலதன உதவியாகவும் ஏற்கனவே அளிக்கவேண்டியுள்ள 1,498.74 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை விரைவில் வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்.