நியூட்ரினோ திட்டம் குறித்து வைகோவுடன் பேசத் தயாராக இருப்பதாக திட்ட இயக்குநர் நபா கே.மாண்டல் தெரிவித்துள்ளார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அருகே வடபழஞ்சியில் அமைந்துள்ள இந்திய நியூட்ரினோ ஆய்வகத்தில் கருவியாக்கல், உணர்கருவிகள் மற்றும் துகள்கள் பற்றிய இரண்டாவது தேசிய அளவிலான கருத்தரங்கு இன்று (சனிக் கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நேற்று மாலை , இந்திய நியூட்ரினோ ஆய்வகத்தின் திட்ட இயக்குநர் பேராசிரியர் நபா கே.மாண்டல் பங்கேற்ற விளக்க கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், “நியூட்ரினோ ஆய்வில் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. அடிப்படை துகள்கள் குறித்த மிக முக்கியமான இந்த ஆய்வில் இந்தியா பின்தங்கி விடக் கூடாது. எனவே, இந்த ஆய்வகம் விரைவாக அமைக்கப்பட வேண்டியது அவசியம். இத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான கேடும் ஏற்படாது” என்றார்.
கூட்டத்தில் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிரான அமைப்புகளை சேர்ந்த சிலர் பங்கேற்று, அவரிடம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். இது ஒரு அறிவியல் கருத்தரங்கம். எனவே, கருத்தரங்கு முடிந்த பின்னர் உங்கள் கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறேன் என்ற நபா கே.மாண்டல், கூட்டம் முடிந்த பிறகு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது இளைஞர்கள் காரசாரமாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நபா கே.மாண்டலிடம், நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையால் நியூட்ரினோ திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதா? என்று கேட்கப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில், நாங்கள் தாக்கல் செய்த பதில் மனுவிலேயே, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற பிறகுதான் திட்டப் பணிகளைத் தொடங்குவோம் என்று தெளிவாக கூறியுள்ளோம். எனவே திட்டத்தில் பின் னடைவு ஏற்பட்டதாக கூற முடியாது என்றார்.
மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அவர், “இந்தத் திட்டம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைச் சந்தித்துப் பேசத் தயாராக இருக்கிறேன். திட்டம் குறித்து முழுமையாக அவருக்கு விளக்க விரும்புகிறேன்” என்றார்.