தமிழகம்

நீதிபதிகளுக்கு பாதுகாப்பு விவகாரம்: உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் முக்கிய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர் பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு உள்துறை செயலர், காவல் துறை இயக்குநர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி எம்.பிரகாசன் வீடு மீது சில நாள்களுக்கு முன்பு கல்வீசி தாக்குல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து, நீதிபதி வீட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

இந்த மனு சென்ற முறை விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் அனைத்து நீதிபதிகளுக்கும், குறிப்பாக முக்கிய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும், நீதிபதி வீட்டில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக உள்துறை செயலர், காவல்துறை இயக்குநர், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பதில் மனுவை கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் தாக்கல் செய்தார்.

அவர் வாதிடும்போது, நீதிபதி வீட்டின் ஜன்னல் கண்ணாடியில் தவளை இருந்துள்ளது. அதை பார்த்து அந்த வழியாக சென்ற சிறுவர்கள் இருவர் கல்லை எடுத்து வீசியுள்ளனர். அந்த கல் பட்டதில் ஜன்னல் கண்ணாடி உடைந்துள்ளது. இது உள்நோக்கத்துடன் நடைபெறவில்லை. இது தொடர்பான புகாரை சம்பந்தப்பட்ட நீதிபதியும் திரும்ப பெற்றுக்கொண்டார் என்றார்.

இந்த சம்பவத்தையடுத்து, மாநிலம் முழுவதும் முக்கிய வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதற்கு உள்துறை செயலர் அல்லது தமிழக காவல்துறை இயக்குநர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT