தமிழகம்

தண்ணீர் பந்தல் அமைக்க கட்சியினருக்கு ஜெயலலிதா, விஜயகாந்த் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

பொது மக்களின் தாகத்தைத் தணிக்கும் வகையில், ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்குமாறு தத்தமது கட்சியினரை, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கையில், "நாம் ஆற்ற வேண்டிய மக்கள் பணி ஒன்று இந்தக் கோடையில் நமக்காக காத்திருக்கிறது. அதுதான் ஆண்டுதோறும் கோடை காலங்களில் குடிநீர் பந்தல்கள், நீர் மோர் பந்தல்கள் அமைக்கும் பணி. அதிமுகவினர் தாங்கள் வாழும் பகுதிகளில், எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிமையான முறையில் ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பொது மக்களின் தாகத்தை தணிப்பதற்காக அமைக்கும் குடிநீர் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை காலை, மதியம், பிற்பகல் நேரங்களில் நேரில் சென்று பார்வையிட்டு சுகாதாரமான முறையில் அவை செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்தப் பணியினை நடைமுறைப்படுத்துவது அவசியம்" என்று கூறியுள்ளார்.

இதனிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், "கோடை காலத்தின் கொடுமையை தவிர்க்க மக்களுக்கு உதவிட தண்ணீர் பந்தல்கள் அமைத்து நல்ல குடிதண்ணீர், நீர்மோர், பானகம், போன்ற தாகம் தணிக்கும் வசதிகளை ஆண்டுதோறும் செய்வது நமது வாடிக்கை.

இந்த ஆண்டும் தே.மு.தி.க. சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து முறையாக அவை செயல்பட வழி வகுக்க வேண்டும். மக்கள் பணியே மகேசன் பணி என்ற உணர்வோடு எனது வேண்டுகோளை தலையாய பணியாகக் கருதி உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

தண்ணீர் பந்தல் திறப்பதற்கான அனுமதியை முறையாக பெற்று தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்திட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளுகிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT