மத்திய அரசின் நேரடி எரிவாயு மானிய திட்டத்தில் சுமார் 7 லட்சம் நுகர்வோர் இன்னும் இணைக்கப்படாமல் உள்ளனர். அவர்கள் அடுத்த மாதம் முதல் சந்தைவிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் களை பயன்படுத்தும் நுகர்வோ ருக்கு தற்போது ரூ.404.50 காசுகள் என்ற மானிய விலையில் காஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை இம்மாத இறுதிக்குள் முடிவடைய உள்ளது. இதற்கு பதி லாக மத்திய அரசின் நேரடி எரிவாயு மானிய திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது. இந்த திட்டத்தில் சேர படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தும் இதுவரை இணைக்கப்படாத நுகர்வோர் பலர் உள்ளனர். தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பேர் இத்திட்டத்தில் இணைவதற்காக காத்திருக்கின்றனர். இவர்கள் அடுத்த மாதம் முதல் சந்தை விலையில் சமையல் எரிவாயு வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நுங்கம்பாக்கத்தை சேர்ந்த நாதன் என்பவர் கூறும்போது, “நேரடி எரிவாயு திட்டத்தில் இணைவதற்கான ஆதார் எண் உட்பட அனைத்து ஆவணங்களையும் கடந்த டிசம்பர் மாதமே எரிவாயு ஏஜென்சி மற்றும் வங்கியிடம் ஒப்படைத்துவிட்டேன். ஆனால் இதுவரை இத்திட்டத்தில் இணைந்ததற்கான தகவல் எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து வரவில்லை. இதனால் அடுத்த மாதம் சிலிண்டருக்கு அதிக தொகை கொடுக்க வேண்டியுள்ளது” என்றார்.
அமைந்தகரையை சேர்ந்த செல்வி என்பவர் கூறும்போது, “மானிய திட்டத்தில் சேர ஆதார் எண் கட்டாயமில்லை என்றபோதும் வங்கிகளில் ஆதார் எண்ணின் நகல் வேண்டும் என்று கூறி அலைக்கழிக்கிறார்கள். இதனால் மானிய திட்டத்துக்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தும் திட்டத்தில் இணைய முடியாமல் உள்ளது” என்றார்.
இதுதொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் உயர் அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
நேரடி எரிவாயு மானிய திட்டத்தில் சேர படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தும் அதில் இணைக்கப்படாமல் சிலர் காத்திருக்கின்றனர். இம்மாத இறுதிக்குள் அவர்களை இத்திட்டத்தில் இணைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் திட்டத்தில் இணையாமல் இருந்தால் அவர்கள் ஏப்ரல் மாதத்துக்கு பிறகு எப்போது இத்திட்டத்தில் இணைகிறார்களோ அதற்கு முந்தைய மாதங்களுக்கான மானிய தொகைகள் மற்றும் முன்பணம் நுகர்வோரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.