தமிழகம்

நோய் தாக்கும் அபாயத்தில் பொதுமக்கள்: திறந்தவெளியில் வழிந்தோடும் கழிவுநீர் - தி இந்து உங்கள் குரலில் புகார்

செய்திப்பிரிவு

கடம்பத்தூர் அருகே பேரம்பாக்கம் பஸ் நிலையத்தினை ஒட்டியுள்ள பொதுக் கழிப்பிட கழிவுநீர், திறந்தவெளி நிலத்தில் விடப்படுவதால் பொதுமக்கள் நோயாளிகளாக மாறி வருவதாக ‘தி இந்து’ உங்கள் குரலில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பேரம்பாக்கம் பஸ் நிலையத்தை ஒட்டி பொதுக் கழிப்பிடம் மற்றும் குளியலறை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டண கழிப்பிடத்திலிருந்து, கழிவுநீர் திறந்தவெளி நிலத்தில் விடப்படுவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து, ‘தி இந்து-உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட பொதுமக்கள் தெரிவித்ததாவது: பேரம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், திருத்தணி, சென்னை- கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த பஸ் நிலையம், அருகேயுள்ள உழவர் சந்தை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நாள்தோறும் வரும் நூற்றுக்கணக்கானோர் இந்த பொதுக் கழிப்பிடத்தையே பயன்படுத்துகின்றனர்.

இந்த பொதுக்கழிப்பிட கழிவுநீர், கடந்த 2 ஆண்டுகளாக கழிப்பிடத்தின் பின்புறத்தில் உள்ள திறந்தவெளி நிலத்தில் வெளியேற்றப்படுகிறது. அப்படி வெளியேற்றப்படும் கழிவு நீரில் பன்றிகளின் புழக்கமும் அதிகரித்திருகிறது. இதனால், திறந்தவெளி நிலத்தினை ஒட்டியுள்ள ஹாஸ்பிட்டல் ரோடு மற்றும் காந்திநகர் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள், அருகேயுள்ள தர்காவுக்கு வரும் பொதுமக்கள், பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் என பலத் தரப்பினரும் நோயாளிகளாக மாறி வருகின்றனர்.

இந்த சுகாதார சீர்கேடு குறித்து, ஊராட்சி நிர்வாகத்தில் பல முறை புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, ‘தி இந்து’ விடம் பேசிய ஊராட்சி நிர்வாக தரப்பு, “பொதுக்கழிப்பிட கழிவுநீரை திறந்தவெளி நிலத்தில் விடப்படுவதை முடிவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தது.

SCROLL FOR NEXT