நாடு முழுவதும் முக்கிய நகரங் களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் ரூ.1.64 லட்சம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்தி ருப்பதாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரி வித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் உள்ள அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில், கொச்சி மெட்ரோ ரயிலுக்குத் தேவையான பெட்டி களை தயாரிப்பதற்கான தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் வெங்கய்ய நாயுடு நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது:
நாட்டில் தற்போது 31 சதவீதமாக உள்ள நகரமயமாதல், 2030-ம் ஆண்டில் 40 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற் கேற்ப போக்குவரத்து தேவையும் அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பற்ற போக்குவரத்துக்கு மெட்ரோ ரயில் அவசியமாக இருக்கிறது. எனவே, மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் தற்போது பல்வேறு நகரங்களில் 249 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. இதை 525 கி.மீட்டராக விரிவுபடுத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்காக மும்பை, சென்னை, நாக்பூர், பெங்க ளூரு, லக்னோ, விஜயவாடா, புனே, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களில் ரூ.1,64,750 கோடி முதலீடு செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது.
மேலும், உற்பத்தித் துறையி லும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த 10 ஆண்டு களில் மொத்த உற்பத்தித் திறனை 25 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 9 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மத்திய அரசு மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை களால் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக உயரும். நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசு கள் கட்சி வேறுபாடுகள் இன்றி இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.
கேரள முதல்வர் உம்மன்சாண்டி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரி வித்தார். நிகழ்ச்சியில், கேரள அமைச்சர் ஆர்யதன் முகம்மது, கே.வி.தாமஸ் எம்.பி., இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் பிரென்கோயிஸ் ரிச்சி உட்பட பலர் பங்கேற்றனர்.
சென்னைக்கு 42 மெட்ரோ ரயில்கள்
அல்ஸ்டாம் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் டோம்னிக் பொலிக்கன் கூறியது: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மொத்தம் 42 ரயில்கள் தேவை. ஒவ்வொரு ரயிலும் 4 பெட்டிகளைக் கொண்டதாக இருக்கும். பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட பெட்டிகளை தயாரித்து வழங்குகிறோம். இதுவரை 23 ரயில்களுக்கு தேவையான பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள ரயில் பெட்டிகளை 2016-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் தயாரித்து வழங்கிவிடுவோம். சென்னை மெட்ரோ ரயில் பாதையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையரக குழு விரைவில் ஆய்வு நடத்த உள்ளது. அப்போது, ரயில் பெட்டிகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அவர்களிடம் விளக்கப்படும் என்று அவர் கூறினார்.