மத்திய பட்ஜெட்டில் 7-வது ஊதியக் குழுவுக்கு போதிய நிதி ஒதுக்காததைக் கண்டித்து, மத்திய அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் சார்பில், மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:
மத்திய அரசு சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கை பெரும்பான்மையான மக்களுக்கு பயனுள்ளதாக இல்லை. தாங்கள் வந்தால் விலைவாசியைக் குறைப்போம், கருப்புப் பணத்தை வெளிக் கொணர்வோம், வேலையில்லா திண்டாட்டத்துக்கு முடிவு கட்டுவோம் என்று பாஜக கூறியது.
ஆனால், நடைமுறையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாதியாக குறைந்தபோதிலும், மத்திய அரசு மூன்று முறை பெட்ரோல், டீசல் மீது கலால் வரியை உயர்த்தி பெட்ரோல் விலை குறைவின் பயன் மக்களை சென்றடையாமல் பார்த்துக் கொண்டது. மேலும், சேவை வரியை உயர்த்தியதன் மூலம் அனைத்துப் பொருட்களும், விலை உயர்ந்தது.
பணக்காரர்களின் கார்ப்பரேட் கம்பெனி வரியை 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைத்த மத்திய அரசு, மாதச் சம்பளக்காரர்களுக்கு எந்தவித விலக்கும் அளிக்கவில்லை. மேலும் சமூகநீதி, மருத்துவம், கல்விக்கான நிதி ஒதுக்கீடு மிகக் குறைவாக உள்ளது. மேலும், 7-வது ஊதியக் குழுவுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. இதைக் கண்டித்தும், இடைக்கால நிவாரணம் அறிவிக்கக்கோரியும், அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப் படியை இணைக்காததைக் கண்டித்தும் ஏப்ரல் 28-ம் தேதி நாடாளுமன்றம் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு துரைப்பாண்டியன் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சம்மேளனத்தின் பொருளாளர் எஸ்.சுந்தரமூர்த்தி, வருமானவரி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடேஷ் மற்றும் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.