தமிழகம்

புதுக்கோட்டை அரசு மருத்துவமனை விழா: பேனரில் ஜெயலலிதா படம் இல்லாததால் திரும்பிச் சென்ற அமைச்சர்

செய்திப்பிரிவு

புதுக்கோட்டையில் உள்ள டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் ஜெயலலிதா படம் இல்லாததால் திரும்பிச் சென்றார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.29.75 லட்சத்தில் நீராவி மூலம் இயங்கும் நவீன சமையல் கூடம், ரூ.13 லட்சத்தில் டயாலிசிஸ் மையம், ரூ.10 லட்சத்தில் நவீன கருவிகளால் கிருமி நீக்கும் பகுதி மற்றும் ரூ.4 லட்சத்தில் சிறுவர்கள் பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான திறப்பு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

இவ்விழாவுக்கு வந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், மருத்துவமனை நிர்வாகத்தினரால் வாயிலில் வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பிளக்ஸ் பேனரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இல்லாதது குறித்து மருத்துவ அலுவலர்களை கடிந்து கொண்டார். பின்னர், மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.

அதன்பிறகு, அந்த பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்டு, ஜெயலலிதா படத்துடன் கூடிய புதிய பேனர் வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னர், மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், புதிய திட்டங்களை திறந்து வைத்தார். ஆட்சியர் சு.கணேஷ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மாவட்ட சுகாதார இணை இயக்குநர் எஸ். சையதுமொய்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT