தமிழகம்

கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் தேரோட்டம்

செய்திப்பிரிவு

கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டு விடிய விடிய ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் கடந்த 29 ம் தேதி சாகை வார்த்தலுடன் சித்திரைப் பெருவிழா தொடங்கியது. விழாவின் தொடர்ச்சியாக 12ம் தேதி கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும் 13ம் தேதி செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு கண் திறத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த சித்திரை பெருவிழாவில் பங்கேற்க மும்பை, டெல்லி, புனே, சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் குவிந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மணப்பெண் போல தங்களை அலங்கரித்துக்கொண்டு கோயில் முன் வந்து கூடியிருந்தனர்.

பின்னர், பூசாரிகள் கைகளால் செவ்வாய்க்கிழமை மாலை தாலி கட்டிக் கொண்டனர். அதன் பிறகு, இரவு முழுவதும் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். திருநங்கைகள் மட்டுமன்றி வேண்டுதலுக்காக ஏராளமான ஆண்களும் தாலி கட்டிக் கொண்டனர்.

சித்திரை திருவிழாவில் புதன்கிழமை (இன்று) அரவாண் சிரசுக்கு முதல் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து கோயிலின் வடபுறம் உள்ள சகடையில் 30 அடி உயர கம்பம் நட்டு வைக்கோல் பிரி சுற்றி அரவாண் உருவம் அமைக்கும் பணி துவங்கும். பின்னர் பல்வேறு ஊர்களில் இருந்து ஒவ்வொரு பாகமாக எடுத்து வரப்பட்டு அரவாண் திருவுருவம் அமைக்கப்பட்டு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறும்.

தேரோடும் வீதிகள் வழியாக வலம் வரும் தேர் மீது தங்கள் நிலங்களில் விளைந்த காய்கனி, தானியங்களை வீசி வேண்டுதல்களை மக்கள் நிறைவேற்றுவர். அழிகளம் நோக்கி தேர் புறப்பட்டதும் திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுவர். நத்தம் எனப்படும் பந்தலடிக்கு தேர் வந்தடைந்ததும் அரவாண் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிவதோடு நெற்றிப் பொட்டை அழித்தும், கை வளையல்களை உடைத்தும் அழுவார்கள். பின்னர், தாலிகளை அறுத்துவிட்டு குளித்து வெள்ளை உடை அணிந்து சோகமாய் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்வர். அதன்பிறகு 15 ஆம் தேதி விடையாத்தியும், 16 ஆம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது.

கூத்தாண்டவர் கோயில் தேரோட்ட திருவிழாவுக்காக விழுப்புரம், பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், விருத்தாசலம், சென்னை உள்பட பல்வேறு இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

SCROLL FOR NEXT