தமிழகம்

திறமையிருந்தும் வறுமையால் முடங்கிய பெண்களின் சாட்சி: சர்வதேச சாதனைக்கு ஏங்கும் மயிலாடுதுறை மாணவி

கரு.முத்து

இன்று சர்வதேச மகளிர் தினம். பெண்களை முன்னிறுத்த இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டாலும், அபார திறமைகள் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்கள் வறுமையாலும் வாய்ப்பின்மையாலும் வெளி உலகம் அறியப்படாமலே வாழ்கிறார்கள் என்பதுதான் உண்மை.

அப்படி திறமை இருந்தும் வறு மையால் வாடிக் கிடப்போரில் ஒருவர்தான் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாட் டைச் சேர்ந்த மாணவி அமிர்தா. மின்னணுப் பொருட்களை பழுது நீக்கும் தொழில் செய்துவரும் ஈஸ்வரன், தனியார் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றும் நீலாவதி ஆகியோரின் மகளான அமிர்தா(14), மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

குழந்தைப் பருவத்தில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண் டிருந்த அமிர்தா, கடந்த சில ஆண்டுகளாக ஸ்கேட்டிங் மற்றும் வில்வித்தையில் அபார திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். மாவட்ட, மண்டல, மாநில மற்றும் இந்திய அளவிலான போட்டிகள் பலவற்றிலும் கலந்துகொண்டு இந்த 2 விளையாட்டுகளிலும் கோப்பை களை வென்றிருக்கிறார்.

வேலூரில் 2012-ல் நடைபெற்ற ஆச்சார்யா எனப்படும் வில் வித்தை போட்டியில் மாநில அளவில் முதலிடம்.

தமிழ்நாடு அமெச்சூர் ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷனால் 2013-ல் நடத்தப்பட்ட ரோலர் ஸ்கேட்டிங் எனப்படும் சறுக்கு விளையாட்டுப் போட்டியில் 10- 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் மாநில அளவில் முதலிடம்.

2013-ம் ஆண்டு மே மாதம் அவுரங்காபாத்தில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான ரோலர் சாம்பியன் ஷிப் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் என்று கலந்து கொண்ட போட்டிகளில் எல்லாம் வெற்றிபெற்றிருக்கிறார்.

இந்திய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற அமிர்தா, ருமே னியா நாட்டில் நடைபெற்ற சர்வ தேச அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றார். ஆனால், அங்கு செல்வதற்கான செலவுக்கு பணம் இல்லாததால் அதில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

அதன் பின்னர் தொடர்ந்து போட்டி கள் நடந்தாலும் அமிர்தாவின் குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக அவரால் எதிலும் கலந்துகொள்ள முடியாமலேயே போனது. ஒரு கட்டத்தில் பயிற்சியை கூட மேற்கொள்ள முடியாத அளவுக்கு வறுமை வாட்டியது.

ஸ்கேட்டிங் பயிற்சிக்கான ஷூ மட்டுமே 20,000 ரூபாய் என்கிற போது அதை வாங்கித்தர பெற்றோரின் பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை.

அதனால் எந்தவித பயிற்சிகளையும் மேற்கொள்ளாது, போட்டிகளிலும் பங்குபெறாது ஏக்கத்துடன் உள்ளார் அமிர்தா.

வறுமை சூழ்நிலையை உணர்ந்து தன்னை தேற்றிக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினாலும், எங்காவது போட்டிகள் நடைபெறுவது தெரிய வந்தால் தன்னால் பங்கேற்க முடியவில்லையே என மனம் சோர்ந்து விடுகிறார் அமிர்தா என்று மகளைப் பற்றிச் சொல்லி ஆதங்கப் படுகிறார்கள் அவரின் பெற்றோர்.

உதவிக்கரம் நீண்டால் நிச்சயம் சர்வதேச அளவில் சாதனை படைக்க இந்த தன்னம்பிக்கை பெண்ணால் முடியும்.

அசாத்திய திறமை இருந்தும் வாய்ப்பை எதிர் நோக்கி காத்திருக்கிறார் அமிர்தா, வறுமையால் முடங்கிய பெண்களின் சாட்சியாக..

SCROLL FOR NEXT