தமிழகம்

10 பேர் பலியான சம்பவம்: சிட்கோ நிர்வாகிகளுக்கு ஜாமீன்

செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை சிப்காட்டில் 10 பேர் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணிப்பேட்டை சிப்காட்டில் சிட்கோ தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு சுத்திகரிக்கப்படும் தோல் கழிவுகள் தேக்கி வைத்திருந்த தொட்டி, கடந்த ஜனவரி 31-ம் தேதி நள்ளிரவு உடைந்தது. இதிலிருந்து வெளியேறிய தோல் கழிவில் மூழ்கி 10 தொழிலாளிகள் இறந்தனர்.

விபத்து தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிட்கோ பொது சுத்திரிப்பு நிலைய மேலாண் இயக்குநர் அமிர்தகடேசன், நிர்வாகக்குழு இயக்குநர்கள் சீனிவாசன், ஜெயச்சந்திரன், முறையான அனுமதி இல்லாமல் தரம் குறைந்த தொட்டி கட்டியதாக ஒப்பந்ததாரர் மணி மற்றும் சிட்கோ கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் ரமேஷ், புகழேந்தி, சீனிவாசரெட்டி, சரவண கார்த்திக், ராஜேந்திரன், சேவா சீனிவாசராவ் ஆகிய 10 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி, வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி தீனதயாளன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமிர்தகடேசன் உள்ளிட்ட 10 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT