மதுரை குவாரியில் சகாயம் அதிகாரிகளுடன் நேற்று திடீர் ஆய்வில் ஈடுபட்டார். கிரானைட் கற்கள் லாரிகளில் கடத்தப்பட்டது குறித்து விசாரித்ததாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் குவாரி முறை கேடுகள் குறித்து சட்ட ஆணையர் உ.சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். ஆய்வுக் குழுவினர் சகாயத்தின் தனி உதவியாளர் ஆல்பர்ட் தலைமையில் குவாரிகளை படம் பிடித்து வருகின்றனர்.
நேற்று மேலூரை அடுத்த மலம்பட்டி அருகேயுள்ள புறாக்கூடு மலையில் குழுவினர் ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது, சகாயம் அங்கு வந்தார். குவாரியால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தையும் படம் எடுக்கும்படி உத்தரவிட்டார். மட்டங்கிபட்டியிலுள்ள கட்டழகன் கண்மாய்க்கு செல்லும் நீர்வழிப்பாதை குவாரி கற்களால் அடைக்கப்பட்டிருந்தது குறித்தும் ஆய்வு நடந்தது.
குவாரியில் இருந்து கற்கள் லாரிகளில் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில்தான், சகாயம் திடீர் ஆய்வில் ஈடுபட்டதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஆட்சியர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது: சகாயம் குழுவினர் 3 நாட்களுக்கு முன் ஆய்வில் ஈடுபட்டபோது, புதுக்கோட்டை பகுதியில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிவந்த லாரி சிக்கியது.
இதன்மூலம், வேறு மாவட்ட அனுமதிச் சீட்டை பயன்படுத்தி, மேலூர் பகுதியில் அரசு கையகப்படுத்தியுள்ள கிரானைட் கற்களை ஏற்றிச் சென்றனரா என விசாரணை நடந்தது. அரசு கையகப்படுத்தியுள்ள கிரானைட் கற்கள் குறைந்தால், அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர்தான் பொறுப்பு என ஏற்கெனவே ஆட்சியர் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதனால் கிரானைட் கற்களை கிராம உதவியாளர்கள் உட்பட வருவாய்த்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதுவரை கற்கள் ஏதும் திருடப்படவில்லை. சகாயம் ஆய்வுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை’ என்றார்.
ஜல்லி குவாரி நடந்த அனுமதி?
மதுரை மாவட்டத்தில் 2012 ஆகஸ்ட் முதலே கிரானைட் உட்பட குவாரிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கழிவு கற்களிலிருந்து ஜல்லி கற்கள் வெட்டி எடுக்க அனுமதி கேட்டு பல விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இது குறித்து சம்பவ இடங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி மதுரை கோட்டாட்சியர் செந்தில்குமாரிக்கு ஆட்சியர் இல.சுப்பிரமணியன் உத்தரவிட்டிருந்தார். இதன் பேரில் கேசம்பட்டி, ஆலம்பட்டி, கருங்காலக்குடி, திருச்சுனை உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களை கோட்டாட்சியர் நேற்று ஆய்வு செய்தார். சகாயத்துக்கு தெரியாமலேயே கோட்டாட்சியர் கிரானைட் குவாரிகளைத்தான் ஆய்வு செய்கிறார் என பரபரப்பு தகவல் பரவியது.