உலக காசநோய் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் சென்னையில் மனிதச் சங்கிலி விழிப் புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மார்ச் 24-ம் தேதி உலக காசநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு 90 லட்சம் பேர் காசநோயால் இறப்பதாகவும், இந்தியாவில் 2.7 லட்சம் பேர் இறப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது.
காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலை மனித சங்கிலி நடைபெற்றது. சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் ப.பெஞ்சமின், ஆணையர் விக்ரம் கபூர், 9வது மண்டலக் குழுத் தலைவர் சக்தி, மாநகர சுகாதார அலுவலர் ஜெகதீசன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் இந்த மனிதச் சங்கிலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பொது சுகாதாரத் துறையின் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாடு திட்டத்தில் அனைத்து மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காசநோய்க்கான சளி பரிசோதனை இலவசமாக செய்யப்படுகி்றது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு மாதங்கள் முதல் எட்டு மாதங்கள் வரை டாட்ஸ் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.