தமிழகம்

ஆம் ஆத்மி கட்சி முற்றுகை எதிரொலி: முதல்வர் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

செய்திப்பிரிவு

ஆம் ஆத்மி கட்சியினர் முற்றுகை எதிரொலியாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேளாண்துறை அதிகாரி முத்துகுமாரசாமி தற்கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து மனு கொடுப்பதற்காக, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் சென்றனர்.

போலீஸார் அனுமதிக்காததால், பாதுகாப்பு வளையத்தை மீறி முதல்வர் வீட்டை முற்றுகையிட்டு உள்ளே புக முயன்றனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பில் கவனக்குறைவாக செயல்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக முதல்வர் வீட்டை முற்றுகையிடும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு கூடுதல் பாதுகாப்பு வேண்டாம் என்று தெரிவித்ததால், அவருக்கு வழக்கமான பாதுகாப்பே அளிக்கப்பட்டு வந்தது.

ஆம் ஆத்மி கட்சியினரின் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து, தற்போது முதல்வர் வீட்டின் முன்பு கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT