தமிழகம்

முஸ்லிம்கள் திருமணத்தில் அதிகாரிகள் தலையிடுவதை நிறுத்தக் கோரி வழக்கு

செய்திப்பிரிவு

மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த எம்.முகமது அப்பாஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

முஸ்லிம் மதத்தினரின் திருமணங்கள் இஸ்லாமிய திருமணச் சட்டத்தின்கீழ் நடைபெறுகின்றன. இச்சட்டத்தின்கீழ், பெண் பருவம் அடைந்துவிட்டால் அவர் திருமணம் செய்து கொள்ளலாம். இஸ்லாமியச் சட்டப்படி பருவம் அடைவதும், மேஜராவதும் ஒன்றுதான்.

ஆனால், தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடைய முஸ்லிம் பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதை சமூக நலத் துறை அதிகாரிகள் தடுக்கின்றனர். முஸ்லிம் சட்டப்படி நடைபெறும் திருமணங்களை அதிகாரிகள் தடுக்க முடியாது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய ஆயிஷாபானுவுக்கு நாளை (8-ம் தேதி) திருமணம் நடக்கவுள்ளது. ஆனால், கடந்த 2-ம் தேதி மாவட்ட சமூக நலத் துறை அதிகாரிகள், போலீஸாருடன் எங்கள் வீட்டுக்கு வந்து ஆயிஷாபானுவை அழைத்துச் சென்றுவிட்டனர்.

அச்சிறுமியைக் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். அவரை பெற்றோர் சந்திக்க அனுமதிப்பதில்லை. முஸ்லிம் பெண்களின் திருமணத்தைத் தடுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. ஆயிஷாபானுவை விடுவிக்கவும், ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

தமிழகத்தில் முஸ்லிம்கள் தனிச் சட்டப்படி நடைபெறும் திருமணங்களை, குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தை மேற்கோள் காட்டி தடுக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், வி.எஸ். ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிட்டார். விசாரணைக்குப் பின், சிறுமி ஆயிஷாபானுவை மார்ச் 9-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT