தமிழகம்

முழு அடைப்புப் போராட்டத்தை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும்: வைகோ வேண்டுகோள்

செய்திப்பிரிவு

இன்று நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு தர வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்தார்.

விருதுநகரில் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு பொதுச் செயலர் வைகோ தலைமை வகித்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

பாசனத்துக்காக கர்நாடகம் புதிதாக எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்று காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 11 லட்சம் ஏக்கர் பாசனத்துக்காக காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கர்நாடகம் திட்டமிட்டுள்ளது.

தற்போது கிடைக்கும் தண்ணீர் மூலம் ஒருபோக சாகுபடியாவது தமிழகத்தில் நடைபெறுகிறது. அணை கட்டப்பட்டால் 15 மாவட்டங்கள் பாழாகும். 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காது. 3 கோடி விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாது. தமிழகத்தில் மூன்றில் இரண்டு பகுதிக்கு பெரும் அழிவு ஏற்பட நாம் அனுமதிக்கக் கூடாது.

நடுவர்மன்றத் தீர்ப்பை துச்சமாக நினைத்து செயல் படுகிறது கர்நாடக அரசு. இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உண்டு. அணை கட்ட அனுமதி கொடுக்கவில்லை எனக் கூறிக்கொண்டு அணை கட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.

எனவே, தமிழகத்தின் உரிமைகளைக் காக்கவும், கர்நாடகத்தின் அநீதியை தடுத்து நிறுத்தவும், மத்திய அரசுக்கு அதை உணர்த்துவதற் காகவும்தான் இன்றைய போராட்டம் நடைபெறுகிறது. எனவே இப்போராட்டத்துக்கு தமிழக அரசு ஆதரவு தர வேண்டும்.

தமிழகத்தில் பாலியல் வன் முறைகள், கொலைகளுக்கு மூல காரணம் மதுதான். அரசு தேர்வின்போது முறைகேடுகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் தண்டிக் கப்பட வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT