தமிழகம்

தமிழகத்துக்கு ஒரு நிலக்கரிச் சுரங்கம்: டெல்லி கூட்டத்தில் முடிவு

எஸ்.சசிதரன்

அரசுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவுள்ள நிலக்கரிச் சுரங்கங்களில், தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ஒன்று கிடைப்பது உறுதியாகிவிட்டது. அது குறித்த தகவலை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிடவுள்ளது.

நம் நாட்டில் உள்ள மின்னுற் பத்தி நிலையங்களில், நிலக் கரியைப் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களே அதிகமாக உள்ளன. தமிழகத்தில் அனல் மின்நிலையங்களின் பங்கு 35 சதவீதமாக உள்ளது.

தமிழகம் தற்போது, மத்திய அரசு அனுமதியின்கீழ் ஒடிஸாவில் உள்ள டால்ச்சர், ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் (இசிஎல்) ஆகிய நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை வாங்கி வருகிறது.

இந்நிலையில், அந்தந்த அரசுத் துறை மின் நிறுவனங்களே சொந்த மாக நிலக்கரியை வெட்டியெடுத்து பயன்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக, நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள் ளது.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் பெரும் முறைகேடு நடந்ததாகக் கூறி 200-க்கும் மேற்பட்ட, தனியார் நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஆணைகளை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ரத்து செய்தது.

அதைத் தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு, ஜார்க்கண்ட், ஒடிஸா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 43 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்தது.

இந்த ஏலத்தில் தமிழக மின்வாரியம், ஒடிஸாவில் உள்ள மகாநதி-மச்சகட்டா மற்றும் கரே பால்மா (2-வது செக்டர்) ஆகிய இரு நிலக்கரி சுரங்கங்களைக் கோரி மனு செய்துள்ளது.

இதனை இறுதி செய்வது தொடர்பாக புதுடெல்லியில் மத்திய நிலக்கரித் துறை திங்கள்கிழமை ஒரு முக்கிய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. அதன் முடிவில், தமிழகத்துக்கு ஒரு நிலக்கரிச் சுரங்கம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து எரிசக்தித் துறை வட்டாரங்கள் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:

புதுடெல்லியில் நிலக்கரி அமைச்சக செயலர் தலைமையில் நடந்த கூட்டத்தில், நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ள மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், மற்றும் சுரங்கங்களைக் கோரி மனு செய்துள்ள 29 மாநில மற்றும் மத்திய மின்னுற்பத்தி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தின் சார்பில் மின்வாரியத் தலைவர் சாய்குமார் பங்கேற்றார்.

தமிழகம் 2 சுரங்கங்களுக்கு மனு செய்திருந்தபோதிலும், ஒரு சுரங்கம் மட்டும் ஒதுக்கப்படும் என்று நிலக்கரி அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. அது குறித்த மேலும் விவரங்களை வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) வெளியிடுவோம் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.

இந்த ஒதுக்கீட்டுக்குப் பிறகு புதிய திட்டங்களுக்குத் தேவைப்படும் நிலக்கரியை நாமே வெட்டி எடுத்துக் கொள்ளலாம். நிலக்கரி தட்டுப்பாடும் ஏற்படாது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT