மதுவிலக்கு தொடர்பாக கடந்த 2 மாதங்களில் 20,068 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 20,220 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுவிலக்கு குற்றங்களைத் தடுப்பது தொடர்பான ஆலோச னைக் கூட்டம் மதுரையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஏடிஜிபி சி.கே.காந்திராஜன் தலைமை வகித்தார்.
மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், தென் மண்டல ஐ.ஜி அபய்குமார்சிங், மதுரை சரக டிஐஜி ஆனந்த் குமார் சோமானி, எஸ்.பி விஜயேந்திரபிதாரி, மாநகர காவல் துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா, மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பி ஆர்.சக்திவேல், ஏடிஎஸ்பி முருகேஷ் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அப்போது கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், விற்போர், போலி மதுபானம் தயாரிப்போர், பிறமாநிலங்களிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்வோரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஏடிஜிபி காந்திராஜன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட காவல்துறை, மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் இணைந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கடந்த 2 மாதங்களில் மதுவிலக்கு தொடர்பாக 20,068 வழக்குகள் பதிவு செய்து, 1,692 பேர் பெண்கள் உள்பட 20,220 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 46 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்பிலான கள்ளச்சாராயம், ரூ.3.42 லட்சம் மதிப்பிலான கள்ளச் சாராய ஊறல், ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள கள், ரூ.1.72 கோடி மதிப்பிலான மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.