தமிழகம்

தமிழக இலவசத் திட்டங்களும் நிதி ஆதார விளைவுகளும்

அஜய் ஸ்ரீவத்சன்

பொதுவாக தமிழகத்தின் நிதி நிர்வாகம் கவனிக்கத்தக்கதாக இருந்தாலும், இலவசத் திட்டங்களுக்காக செலவிடப்படும் தொகை மிகப் பெரிதாக உள்ளது என்று மாநில நிதி நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் அடுத்தடுத்த தமிழக அரசுகளால் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது, ரு.11,561 கோடி இலவசத் திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக 3 இலவசத் திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள், மடிக்கணினிகள் மற்றும் மிக்ஸி, ஃபேன் உள்ளிட்ட இலவச வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகிய இலவசத் திட்டங்களுக்கு பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சமீபத்திய பட்ஜெட், மாநிலத்தின் மோசமான நிதி நிலைமைகளை அறிவுறுத்தியுள்ள நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் இலவசத் திட்டங்களுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்படுவது குறித்து கேள்விகள் எழுகின்றன.

இலவசத் திட்டங்களுக்காக செலவழிக்கப்பட்ட தொகையில் 25,000 பள்ளிகளையோ அல்லது 11,000 முதல்நிலை சுகாதார மையங்களையோ ஏற்படுத்தியிருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது.

இந்திரா காந்தி ஆய்வு மையத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் இதுபற்றி கூறும்போது, “இலவசத் திட்டங்களுக்குச் செலவிட தமிழக அரசிடம் மீதம் எதுவும் இல்லை.

மாநில பொருளாதார வளர்ச்சி விகிதத்துக்கும் பொதுக்கடன் வளர்ச்சி விகிதத்துக்கும் உள்ள வித்தியாசம் குறுகிக் குறுகி கடையில் தற்போது பூஜ்ஜியத்தில் வந்து நின்றுள்ளது. ஏதோ ஒரு கட்டத்தில் இலவசங்கள் நிறுத்தப்படுவது அவசியம்” என்றார்.

கூடுதல் நிதியாதாரங்கள் இலவசத் திட்டங்களுக்காக திருப்பப் படுவதால் மாநிலத்தின் பொது சுகாதார மையங்களுக்கு தேவையான கூடுதல் நிதி கிடைப்பதில்லை என்கிறார் சந்திரசேகர்.

பொது சுகாதாரம், மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கு நீண்ட-கால முதலீடுகள் தேவைப்படும் நிலையில் இந்தத் துறைகளுக்காக 'மிகச்சிறிய தொகையே' மீதமுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மாநில நிதி ஆதாரங்களைப் பற்றிய மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி, நாட்டில் உள்ள 17 பெரிய மாநிலங்களில் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்காக செலவிடப்படும் தொகை தமிழகத்தில் சராசரிக்கும் குறைவாகும்.

“இந்திய மாநில அரசுகள் சோஷலிசம் மற்றும் சேமநல அரசுகள் என்ற கருத்து ஒரு தப்பிதம். நாம் உண்மையில் ஏழைகளின் வளர்ச்சிக்காக செலவிடுவதில்லை என்பதே உண்மை. இலவசத் திட்டங்கள் ஒரு குறியீட்டுச் செயல்பாடு என்பதற்கு மேல் ஒன்றுமில்லை” என்று ஆய்வு மைய அதிகாரி சந்திரசேகர் கூறுகிறார்.

மற்றவர்கள் இது பற்றி கருத்து தெரிவிக்கும் போது, இலவசத் திட்டங்கள் ஒரு விவகாரம் என்றால் அதைவிடவும் முக்கியமான பிரச்சினைகள் இருக்கின்றன என்கின்றனர். உதாரணமாக, சம்பளம் உள்ளிட்ட செலவினங்கள் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன என்று சென்னைப் பல்கலைக் கழகத்தின் பேராசியரும், நிதி ஆதார நிபுணருமான ஆர்.ஸ்ரீனிவாசன் தெரிவிக்கிறார்.

2005-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை சம்பள வகையில் தமிழக அரசின் செலவினம் 4 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது ரூ.8000 கோடியிலிருந்து ரூ.34,000 கோடியாக அதிகரித்துள்ளது.

"நம் மாநில பொதுச் செலவினங்களை நிர்வகிப்பதில் கடுமையான திறமைக் குறைபாடுகள் உள்ளன. ஆனால் யாருமே இதுபற்றி கவலைப்படுவதில்லை.

மத்திய அரசு போல் அல்லாமல், மாநில அரசுகள் வரிக் கழிவுகள் மற்றும் தொழிற்துறை, வர்த்தகத் துறைகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளினால் இழக்கப்படும் வருவாயை வெளியிடுவதில்லை. இப்படிப்பட்ட வருவாய் இழப்புகளே உண்மையான மாநில நிதி ஆதாரப் பற்றாக்குறைகளூக்கு முதன்மைக் காரணம்” என்று பேராசிரியர் ஆர்.ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT