சென்னை தலைமை செயலகம் முன்பு பார்வையற்ற பட்டதாரிகள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற பட்டதாரிகள் நடத்தும் போராட்டம் சென்னையில் 10வது நாளாக தொடர்கிறது.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகம் முன்பு பார்வையற்ற பட்டதாரிகள் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜேம்ஸ், ரகு ஆகிய இரு பட்டதாரிகளும் முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு வருவதற்கு சற்று முன்னதாக தீக்குளிக்க முயன்றனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் விரைந்து வந்து பெட்ரோல், மண்ணெண்ணெய் கேன்களை அப்புறப்படுத்தியதுடன் தீக்குள்ளிக்க முயன்ற இருவர் மீதும் தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து, இருவரையும் கைது செய்ய முயன்றனர். அப்போது போலீஸாருக்கும் பார்வையற்ற பட்டதாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனிடையே நேப்பியர் பாலம் அருகே பார்வையற்ற பட்டதாரிகள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.